பக்கம்:மன ஊஞ்சல்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 மன ஊஞ்சல் தங்கம் அவன் சொன்னதையெல்லாம் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள். "ஏம்மா, வெயிலிலே நிக்கறிங்களே, உள்ளே வந்து உட்காருங்க!' என்று சொல்லிக் கம்பிக் கதவைத் திறந்தான் சுப்பையாக் கிழவன். 'இல்லே, போய் வருகிறோம்' என்றாள் தங்கம். 'தங்கம், சாவி தான் இவரிடம் இருக்கிறதே! நாம் மாளிகையை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டுப் போனால் என்ன?’ என்று ராதா கேட்டாள். தோட்டக்காரக் கிழவன் சுப்பையாவும் வற்புறுத்தவே, அவர்கள் மூவரும் மாளிகைக்குள் நுழைந்தார்கள். தோட்டக் காரன் தன் வீட்டிலிருந்து அவர்களுக்குக் குடிக்க நீர் கொண்டு வந்து கொடுத்தான். மாளிகை முழுவதும் திறந்து காண்பித்தான். மரகத அம்மாளும், ராதாவும் வியப்புடன் மாளிகையைச் சுற்றிப்பார்த்துக் கொண்டு வந்தார்கள். மாளிகையின் ஒரு பெரிய கூடத்தின் நடுவில் சுவரில் மாட்டியிருந்த ஒரு பெண்மணியின் படத்தைப் பார்த்ததும், 'அம்மா!' என்று கதறிக்கொண்டே அதை நோக்கி ஓடினாள் மரகத அம்மாள். பிறகு அதைப் பார்த்தபடி நின்று கொண்டே மாலை மாலை யாகக் கண்ணிர் கொட்டினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/204&oldid=854317" இலிருந்து மீள்விக்கப்பட்டது