பக்கம்:மன ஊஞ்சல்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 மன ஊஞ்சல் இரக்கத்தினாலோதான் ஏற்பட்டிருக்க வேண்டும்' என்றாள் மரகத அம்மாள். 'மரகதம், என்ன சொல்லுகிறாய்?’ என்று மீண்டும் சினக்குரலில் கேட்டார் கயிலாயம். அதற்கு மரகத அம்மாள் பதில், சொல்லவில்லை. கந்தசாமி வாத்தியார் தான் பதிலளித்தார். 'ஐயா, மரகதம் சொல்வது உண்மை தான். தங்கம் வேறொரு பையனைக் காதலிப்பதாகத் தெரிகிறது. அவள் மனத்துக்கு விரோதமாக மணம் முடித்து வைக்க எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், உங்கள் விருப்பத்தை மீறி நடக்கவும் எங்களுக்குத் தடுமாற்றமாயிருக்கிறது. இதில் நீங்கள் தான் எங்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட வேண்டும்’ என்றார். 'யார் அந்தப் பையன்?' என்று அதட்டலான குரலில் கேட்டார் கயிலாயம். "அவனும் உங்கள் அன்புக்குபாத்திரமான பையன்தான். ஆனால், சாதாரண நிலையில் உள்ளவன். உங்களாலேயே வாழ்வில் ஒருபடி உயர்ந்தவன்' என்றார் கந்தசாமி வாத்தியார். கயிலாயம் அவன் யாராயிருக்கும் என்று நினைத்துப் பார்த்தார். அவருக்குப் புலப்படவில்லை. 'கந்தசாமி, அந்தப் பையன் யார்?' என்று கேட்டார். "ஐயா, முருகேச வாத்தியாரின் மகன் நடராசனைத் தான் தங்கம் விரும்புகிறாள்!” என்றார் கந்தசாமி. கயிலாயத்தின் முகத்தில் ஒரு குறுநகை நெளிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/332&oldid=854460" இலிருந்து மீள்விக்கப்பட்டது