பக்கம்:மன ஊஞ்சல்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. காரிருளில் காதல் பிறந்தது. நாம் எத்தனையோ சமயங்களில் உறுதியான முடிவுக்கு வருகிறோம். ஆனால், சிலசமயம் எவ்வளவோ நாட்களாக நாம் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு வந்து சேர்ந்த அந்த உறுதி கடைசியில் எப்படியோ திடீரென்று உருக்குலைந்து போவதும் உண்டு. தங்கம் தியாக வாழ்வு வாழவேண்டுமென்று முடிவு கட்டியதும், அந்த எண்ணம் கைகூடாதென்று தெரிந்தபோது, தியாகச் சாவையாவது அடைவதென்ற திண்ணமான முடிவுடன் இருட்டில் வெளிக் கிளம்பிக் கிணற்றடிக்கு வந்ததும் எவ்வளவோ உறுதியான முடிவுகளாகத் தான் இருந்தன. தொலைதேசத்திற்குப் போவதற்காக மூன்று மாதங் களாகத் திட்டமிட்டு, வேண்டிய சாமான்களெல்லாம் சேகரித்துக் கட்டி வைத்து ஒன்றுக் கிரண்டு முறை சரி பார்த்துக் கடைசியில் புறப்பட்டு வெளிவந்த பிறகு ஏதோ முக்கியமான ஒன்றை மறந்து விட்டுத் திரும்பி வீட்டிற்குள் நுழைவதுண்டல்லவா? அதுபோலத்தான், தங்கமும் எத்தனையோ நாட்களாகத் திட்டமிட்டுக் கடைசியில் சாவ தென்றே முடிவுக்கு வந்தவள் கிணற்றடியில் வந்து நின்று கைப்பிடிச் சுவரில் ஏறிக் குதிக்கக் காலைத் தூக்கியவள், சட்டென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/337&oldid=854465" இலிருந்து மீள்விக்கப்பட்டது