பக்கம்:மன ஊஞ்சல்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மன ஊஞ்சல் எவரிடத்தும் சாந்தமாகவே பேசும் அண்ணாமலைப் பண்டிதரையும் இதுபோன்ற அருளுள்ளம் கொண்ட அன்புடையாரையுமே பெரும்பாலும் கண்டுவந்திருந்த தங்கத்திற்கு, அந்தக் கொடுமையான புதிய முகத்தைக் காணும்போது ஒரே பயமாக இருந்தது. அத்துடன் அவளுடைய நாடி நரம்புகளெல்லாம், சில மணிநேரத்திற்கு முன்னால் நடந்த பேய் விளையாட்டிலே அதிர்ந்துபோய் இருந்தபடியால், அதையடுத்த நிகழ்ச்சியாக அந்த முகத்தைக் கண்டவுடன் பேரதிர்ச்சியுற்று மயக்க நிலையை யடைந்து விட்டாள் என்று சொல்லலாம். நெடுநேரத்திற்குப் பிறகு தங்கம் கண்விழித்தபோது அவளருகில் ஒரு கூனற் கிழவி உட்கார்ந்திருந்தாள். அந்தக் கூனற் கிழவியின் உருவத்தையும் அவள் உடுத்தியிருந்த ஆடைகளையும் அவள் தோற்றத்தையும் பார்க்கவே அருவருப்பாயிருந்தது. அவள் உடலிலிருந்து புறப்பட்டுக் காற்றில் கலந்த ஒரு நெடியும் மூக்கைத் துளைத்தது. மெல்லக் கண் விழித்த தங்கம் தன் கண்களைச் சுற்று முற்றும் உருட்டிப் பார்த்தாள். அவள் கண்களில் பட்ட பொருள்களெல்லாம் கனவில் பட்ட காட்சிகளைப்போல் இருந்தன. மெதுவாக நான் எங்கு இருக்கிறேன்?' என்று கேட்டாள். - "பயப்படாதே, கண்ணே! நம் வீட்டில்தான். இருக் கிறாய்!” என்ற நல்ல வார்த்தைகள் அந்தக் கூனற் கிழவியின் வெற்றிலை குதப்பும் வாயிலிருந்து வெளிப்பட்டன. 'பாட்டி, நீங்கள் யார்? நான் எப்படி இங்கே வந்தேன்!' என்று தங்கம் கேட்டாள். அந்தக் கிழவி அவலட்சணமாக அவளுடைய பொக்கை வாயால் ஒரு புன்சிரிப்பை யுதிர்த்தாள். அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் 'கண்ணே, உனக்கு பசிக் கிறதா?’ என்று கேட்டாள். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/84&oldid=854541" இலிருந்து மீள்விக்கப்பட்டது