பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

99


நாடுகளை அழித்து அந்நாட்டுச் செல்வங்களைத் தன் நாட்டுக்கு கொண்டுவந்தான்[1]. இவனால் அழிக்கப்பட்ட கோட்டைகள் எண்ணற்றவை[2]. யானைக் காலில் மூங்கில் முளைகள் நசுங்கி அழிவதுபோல் இவனுக்குச் சினமூட்டியவர் நசுக்கப்பட்டனர்[3]. இவனது படைகள் அணிவகுத்துச் செல்வது கண்ணுக்கினிய காட்சியாயினும் பகைவர்க்கு அது இன்னாதது[4]. இவனது படையில் பலமொழி பேசும் மக்களும் வீரர்களாய் விளங்கினர்[5]. அவர்கள் பகைவர்களைக் காஞ்சியாக்கும் (நிலையாமையாக்கும்) பண்பினர்[6]. இவன் பாசறையில் தங்கியிருந்தபோது வேந்தர்கள் இரவு பகலாய்த் தூங்காமல் நடுங்கிக் கொண்டிருந்தனர்[7]. இவ்வாறு போர் வல்லமை உடையவனாக இவன் திகழ்ந்தான்.

கொடை

இவன் இசைவாணர்களைப் பேணிப் பாதுகாத்து வந்தான்[8]. இசைபாடும் பெண்களுக்கு அரிய நல்ல அணிகலன்களை அளித்துச் சிறப்பித்தான்[9]. வறுமையில் வாடியவர்களுக்கு அவர்களது துன்பம் நீங்கும் அளவுக்குக் கொடுத்தான்[10]. போர் வெற்றியில் கிடைத்த செல்வங்களையெல்லாம் வஞ்சி மூதூருக்குக் கொண்டு வந்து பிறர்க்கு உதவும் வகையில் நல்கினான்[11].

பெருங்குன்றூர்கிழார் இவன் போர்ப் பாசறையில் இருந்த போது கண்டு பாடினார்[12]. அவரது பாடலைப் போற்றி இளஞ்சேரல் இரும்பொறை 32 ஆயிரம் காணம் பணமாகக் கொடுத்தான். பெருங்குன்றூர்கிழாரின் பாடல்திறத்தைக் கண்டு, வியந்து போற்றாதவர்களுக்கு இந்தச் செல்வத்தை அளித்துப் புலவர் பிறரை வியக்கச் செய்ய வேண்டும் என்று கூறி அந்தச் செல்வத்தைக் கொடுத்தான்[13]. புலவர் இந்தப் பணத்தைப் பிறருக்குக் கொடுத்தபின்


  1. ஷை 83 : 6 - 7
  2. ஷை 84 : 7 - 8
  3. பதிற். 84 : 11 - 12
  4. ஷை 83 : 3 - 6
  5. ஷை 90: 30
  6. ஷை 84 : 19
  7. ஷை 81 : 35 - 37
  8. 'பாடுநர் புரவலன்' (பதிற். 86 : 8)
  9. 'பாடினி நன்கலம் பெறுகுவை' (பதிற். 87 : 1)
  10. 'இல்லோர் புன்கண் தீர நல்கும் (பதிற். 86 :6)
  11. பதிற். பதி. 9 : 9
  12. பதிற். 82 : 2
  13. 'மருளில் லார்க்கு மருளக்கொடு வென்று' (பதிற். பதி.9) கொளு