பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


அவரது வாழ்க்கைக்கு உதவும் பொருட்டு ஊர்களும், வளமனைகளும், அவ்வீட்டில் வாழ்வதற்கு வேண்டிய பொருள் வளமும், வேளாண்மை செய்வதற்காக ஏர் வளமும், இன்பமாக வாழ்வதற்கு வேண்டிய பிற வசதிகளும், எண்ணிலடங்கா அணிகலச் செல்வமும் அவருக்குக் கொடுத்ததோடு அச்செல்வங்களையெல்லாம் முறையாக நிர்வகித்து உதவும் வகையில் ஏற்பாடும் செய்து கொடுத்தான்[1].

இளஞ்சேரல் இரும்பொறையே அன்றி அவனது நாட்டில் இருந்த செல்வர்களும் தம்மை நாடி வந்தவர்களுக்கெல்லாம் வாரி வழங்கும் வள்ளல்களாக விளங்கினர்[2].

குறிப்பிடத்தக்க செயல்கள்

இளஞ்சேரல் இரும்பொறையின் செயல்களில் குறிப்பிடத்தக்கவை சில உள்ளன. அவை வருமாறு:

சதுக்கப்பூதரை வஞ்சிக்குக் கொண்டுவரல்

பெருஞ்சதுக்கத்து அமர்ந்திருந்த பூதங்களைக் கொண்டுவந்து வஞ்சி நகரில் நிலை நாட்டினான்[3]. இவன் கொண்டுவந்தவை பூதச்சிலைகள் எனக் கொள்ளலாம். இவன் எங்கிருந்து இந்தப் பூதச்சிலைகளைக் கொண்டுவந்தான் என்பது தெரியவில்லை. எனினும் சோழனை வென்ற இவன் சோழ நாட்டுப் புகார் நகரிலிருந்த பூதச்சிலைகளைக் கவர்ந்து வந்தான் என்று உய்த்துணரப்படுகிறது. மணக்கிள்ளி என்ற சோழ அரசன் பீலிவளை காரணமாக இந்திரவிழாக் கொண்டாட மறந்ததனால், காவிரிப்பூம் பட்டினம் கடல்கோளுக்கு இரையானதற்கும், இவன் புகார் நகரத்துப் பூதச்சிலைகளைக் கவர்ந்து வந்ததற்கும்கூடத் தொடர்பிருக்க வாய்ப்பு உண்டு.

இவ்வாறு இளஞ்சேரல் இரும்பொறை நிலைநாட்டிய சிலைக்குச் சாந்தி வேள்வி செய்தான். சாந்தி வேள்வி என்பது நடுகல் விழாவாகும்.

மந்திர மரபில் தெய்வம் பேணல்

தெய்வ வழிபாடு தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலவி வந்த வழக்கமே ஆகும். ஆனால், இந்த இளஞ்சேரல் இரும்பொறை மந்திரம்


  1. பதிற். பதி. 9 கொளு
  2. பதிற். 81 : 22 - 23
  3. ஷை பதி. 9 : 13 - 14