பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்
173
இச்செய்யுட்கள் மௌரியரைக் கூறுகின்றன; மோகூரைக் கூறவில்லை. மோரியர், மோகூரின் மேல் படை யெடுத்து வந்த செய்தியைக் கூறுவது மாமூலனாரின் ஒரே ஒரு செய்யுள் மட்டுந்தான். அச்செய்யுட் பகுதி மேலே காட்டப் பட்டது.
மோரியர் மோகூரின்மேல் படையெடுத்து வந்தது பற்றிப் பல அறிஞர்கள் ஆராய்ந்து பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். பி. டி. சீநிவாச அய்யங்கார், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார், மு. இராகவையங்கார் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார், இலக்கண விளக்கப் பரம்பரை சோமசுந்தர தேசிகர், இராமச்சந்திர தீக்ஷிதர் முதலிய பல அறிஞர்கள் இது பற்றி எழுதியிருக்கிறார்கள். திரு. மு. இராகவையங்கார் அவர்கள் தாம் எழுதிய சேரன் செங்குட்டுவன் என்னும் நூலில், மோகூர் - மௌரியர் போரைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்: "மோரிய வரசர் திக்குவிசயஞ் செய்து கொண்டு தென்றிசை நோக்கி வந்தபோது, இப்பழையன் அவர்களுக்குப் பணியாமையால், அவர்க்கும் இவனுக்கும் பெரும்போர் நிகழ்ந்ததென்று தெரிகின்றது" என்று எழுயிருக்கிறார். மற்றும் பல அறிஞர்கள் இது பற்றிப் பல கருத்துக்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அவை எல்லாம் தவறானவை. மாமூலனார் செய்யுளில் ஒரே ஒரு எழுத்துப் பிழை ஏடெழுதுவோரால் நிகழ்ந்துவிட்டது என்று நான் கருதுகிறேன்.
மோகர் என்று எழுதப்பட வேண்டியது மோகூர் என்று எழுதியதுதான் அந்தப் பிழை என்று கருதுகிறேன்.
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழுதானை வம்ப மோரியர்
என்று அது இருக்க வேண்டும். மோகர் பணியாமையின் என்று இருக்க வேண்டிய சொல் மோகூர் பணியாமையின் என்று ஏடெழுதுவோரால் பிழையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். மோகர் என்பவர் கொங்கண நாட்டின் (துளு நாட்டின்) கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்த போர்ப் பிரியராகிய ஓர் இனத்தார். அவர்கள் மீன் பிடிக்கும் தொழிலைச் செய்திருந்தனர். அவர்களுடைய சந்ததியார் இன்றும் மோகர் என்னும் அந்தப் பெயருடனே துளு நாட்டில் (தென் கன்னட மாவட்டம்) இருக்கிறார்கள். (See Thurston's Caste and Tribes of South India) பாண்டி நாட்டிலும் பரதவர் என்னும் இனத்தார் போர் விருப்ப