பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/175

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


முடையவராகப் பாண்டியனுக்கு அடங்காமல் குறும்பு செய்து கொண்டிருந்தபோது அவர்களை நெடுஞ்செழியன் வென்று அடக்கினான் என்பதை அறிகிறோம். இதை மதுரைக் காஞ்சி 'தென்பரதவர் மிடல்சாய' என்று கூறுகிறது. அது போன்று, துளு நாட்டு மோகர் பணியாமையினால் அவர்களை வெல்வதற்கு மோரியப் படை வந்தது. இச்செய்தியைத்தான் மாமூலனார் தம் செய்யுளில் கூறினார். மோகர் என்னுஞ் சொல் மோகூர் என்று தவறாக எழுதப்பட்டபடியால், அது பல ஆராய்ச்சிக்கு இடங்கொடுத்துப் பலப்பல முடிவுக்கு இடமாயிற்று. இது பற்றி விரிவாக எழுதுவதற்கு இது இடமன்று.

சோழ நாட்டிலும் செங்குட்டுவன் ஒரு போரை வென்றான் என்று 5ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது.

வெந்திறல்
ஆராச் செருவிற் சோழர்குடிக் குரியோர்
ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து
நிலைச் செருவின் ஆற்றலை யறுத்து

(பதிகம் 17-20)

(குடிக்குரியோர் என்றது அரசிற்குரியாரை என்று பழையவுரை விளக்கங்கூறுகிறது). சோழன் கரிகாலன் இறந்த பிறகு அவன் மகனான கிள்ளிவளவன் முடி சூடியபோது சோழ அரசர் குடியில் பிறந்த தாயாதிகள் ஒன்பது பேர் முன்வந்து தங்களுக்கு ஆட்சியுரிமையுண்டென்று குழப்பம் உண்டாக்கினார்கள். அதனால் சோழ நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்தது. அது நிலைச்செருவாக நீண்டு நடந்தது. அப்போது செங்குட்டுவன், தன் மைத்துனனான கிள்ளிவளவன் சார்பாக ஒன்பது அரசருடனும் போர் செய்து வென்று ஆட்சியைக் கிள்ளி வளவனுக்குக் கொடுத்தான். இதனைச் சிலப்பதிகாரமும் கூறுகிறது.


மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா
ஒத்த பண்பினர் ஒன்பது மன்னர்
இளவரசு பொறாஅர் ஏவல் கேளார்
வளநா டழிக்கும் மாண்பினர் ஆதலின்
ஒன்பது குடையும் ஒருபகல் அழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப் படுத்தோய்

(சிலம்பு. நீர்ப்படை: 118-123)

என்றும்,