பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்
175
ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை
நேரிவாயில் நிலைச்செரு வென்று
(சிலம்பு, நடுகல்: 116-117)
என்றும் கூறுவது காண்க. (நேரிவாயில் - உறையூர் தெற்கில் வாயிலதோர் ஊர்: அரும்பதவுரை)
செங்குட்டுவன் வடநாடு சென்றபோது கங்கைக் கரையிலே போர் செய்திருக்கிறான். கங்கைக் கரையில் இவன் இரண்டு போர்களைச் செய்தான் என்பதைச் சிலப்பதிகாரத்தினால் அறியலாம். ஒன்று செங்குட்டுவன் தன் தாயைக் கங்கை நீராட்டக் கொண்டு போனபோது நிகழ்ந்தது. மற்றொரு போர், அவன் கண்ணகிக்கு இமயத்தில் கல்லெடுக்கச் சென்றபோது நிகழ்ந்தது. அவற்றைப் பற்றி யாராய்வோம்.
கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம்
எங்கோ மகளை யாட்டிய அந்நாள்
ஆரியமன்னர் ஈரைஞ் நூற்றுவர்க்
கொருநீ யாகிய செருவெங் கோலம்
கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம்
(சிலம்பு. காட்சி 160-165)
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
இதனால், தன் தந்தை நெடுஞ்சேரலாதன் போர்க் களத்தில் புண்பட்டுக் கிடந்து இறந்த பிறகு, இவன் தன் தாயைக் கங்கைக் கரைக்கு அழைத்துச் சென்றதும் அவ்வமயம் அங்கிருந்த அரசர்களுடன் போர் செய்ய நேரிட்டுப் போர் செய்து வென்றதும் அறியப்படுகிறது. இந்தச் செய்தியைப் பற்றி திரு. மு. இராகவையங்கார் தாம் எழுதிய 'சேரன்செங்குட்டுவன்' என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்: 'இனிச் செங்குட்டுவன் தந்தை நெடுஞ்சேரலாதன், முற்கூறியபடி பெருவிறற் கிள்ளியுடன் பொருது இறந்தபோது, அவன் மனைவியரும் உடனுயிர் நீத்தனர் என்பது புறநானூற்றின் 62ஆம் பாடலாற் புலப்படுகின்றது. இதனால், செங்குட்டுவன் தாய் நற்சோணையும் தன் கணவன் சேரலாதனுடன் சககமனஞ் செய்தவள் என்பது பெறப்படும்; ஆயின், அத்தாயின் பொருட்டு அமைத்த பத்தினிப் படிமத்தை (உடன் கட்டையேறிய பத்தினியின் உருவம் வரைந்த சிலை) செங்குட்டுவன் கங்கை நீராட்டச் சென்றவனாதல் வேண்டும். கங்கைக்கரையில்