பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




180

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1

எனவே, செங்குட்டுவன் இமயமலைக்குச் சென்றபோது பேரரசராகிய சதகர்ணியரசரின் உதவிபெற்றுச் சென்றான் என்பதும், அவ்வரசர்கள் இவனுடன் நட்பினராக இருந்தார்கள் என்பதும் தெரிகின்றன.

கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தைந்து ஆண்டு வீற்றிருந்தான். இவன் இளவரசுப் பட்டங் கொண்டது முதல் இவ்வாண்டுகள் கணக்கிடப்பட்டன என்று தோன்றுகின்றது.

செங்குட்டுவன் மீது 5ஆம் பத்துப் பாடிய புலவர் பரணர் என்பவர். இதன்பொருட்டு இவர் பெற்ற பரிசில், உம்பற்காட்டு வாரியை யும் செங்குட்டுவனுடைய மகனான குட்டுவன் சேரலையும் பெற்றார். செங்குட்டுவன் தன் மகனான குட்டுவன் சேரலைப் பரணருக்குக் கொடுத்தான் என்றால், அவனை அவருடைய மாணவனாகக் கொடுத்தான் என்பது பொருள். எனவே, பரணரிடம் செங்குட்டுவன் மகன் குட்டுவன் சேரல் கல்வி பயின்றான் என்பது தெரிகின்றது.

பரணர் உம்பர்காட்டு வாரியைப் பரிசிலாகப் பெற்றார் என்று கூறப்படுகிறார். செங்குட்டுவனுடைய தந்தையான இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனை 2ஆம் பத்துப் பாடிய குமட்டூர்க் கண்ணனாரும் உம்பற்காட்டில் ஐஞ்ஞூறூர்ப் பிரமதாயம் பரிசிலாகப் பெற்றார் என்பதை இங்கு நினைவுகூரவேண்டும்.

இளஞ்சேரல் இரும்பொறை

இவனுக்குக் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை என்றும், சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை என்றும் பெயர்கள் உண்டு. இவன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பியான குட்டுவன் இரும்பொறையன் மகன். அதாவது, செங்குட்டுவனுடைய தாயாதித் தமயனின் மகன். இவனும் செங்குட்டுவன் காலத்தில் இருந்தவன், பொலத்தோப் பொறையன் என்றும் பல்வேற் பொறையன் என்றும் இவன் கூறப்படுகிறான். இவன், சேரநாட்டின் ஒரு பகுதியை யரசாண்டான். எந்தப் பகுதி என்பது திட்டமாகத் தெரியவில்லை. சேர இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த கொங்கு நாட்டை யரசாண்டிருக்கக் கூடும். வானியாற்றின் நீர் போன்று மென்மையான உள்ளம் உடையவன் என்று இவன் கூறப்படுகிறான் (பதிற்று. 9ஆம் பத்து. 6 : 12-13) வானியாறு கொங்கு நாட்டில் ஓடுகிறது.