பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1. சேரர் வரலாறு[1]

சங்ககால இலக்கியங்களின் வாயிலாக அக்கால மக்களின் அக வாழ்க்கையையும், புறவாழ்க்கையையும் ஒருவாறு அறிய முடிகின்றது. அரசர், அரசியர், புலவர்கள், மக்கள், அரசுமுறை, போர்முறை, கொடைத்தன்மை, பழக்கவழக்கங்கள், நாடு, எல்லைகள் ஆகியவற்றை உய்த்துணர முடிகின்றது.

சேரர் - சொல்லும் பொருளும்

இராமாயண காலத்தில் சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களுக்குச் சுக்கிரீவன் வழித்துறைகளை வகுத்துரைக்கும் போது சோழ, சேர, பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகிறான். உதிட்டிரன் இராயசூய வேள்வி வேட்டபோது சோழ, சேர, பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசரும் கூறுகிறார்.

கிரேக்கத் தூதரான மெகஸ்தனீஸ் என்பார் தமது குறிப்பில் சேரர்களைச் சேரமான்கள் என்றே அழைக்கின்றார்.

திருஞானசம்பந்தரும் தமது பதிகங்களில் சேரர், சேரலர் என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டாகும். இதனை நோக்கும்போது சேரர், சேரலர் என்னும் சொற்களே வழக்கில் வந்தனவாகும்.

அசோகனது கல்வெட்டுகளை நாம் நோக்கும்போது சேர புத்திரர் என்பதைக் கேரளபுத்திரர் என்றே வடமொழி அறிஞர்கள் படித்து வந்துள்ளனர். கல்வெட்டில் உள்ள பிராமிய எழுத்துகள் சேரலபுத்திரர் என்று படிக்கும் வண்ணமும் உள்ளது. அதைப் படித்த அறிஞர்கள் கேரளபுத்திரர் என்றே படித்து வந்ததனால், பிற்கால அறிஞர்களும் கேரளபுத்திரர் என்றே கூறிவந்தனர்.

இதனால் நாம் அறிவதாவது சேரலர் தம்மைக் கேரளரென வழங்கத் தலைப்பட்ட காலமானது, தமிழ்மொழியானது சிதைந்து மலையாளமாக மாறிய காலமாயிருக்கலாம். கேரளர் என்னும் சொல்லானது


  1. தமிழ்நாட்டு வரலாறு: சங்க காலம் — அரசியல் (1983) எனும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை.