பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

19


கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்தான் மாறிற்று என்று உரைக்கத்தக்க வகையில், கி.பி. பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பிற்காலச் சோழன் வீரராசேந்திரன் என்னும் அரசனின் கல்வெட்டுகளில் கேரளாந்தகன் என்றே குறிப்பு உள்ளது.[1] இன்றும் தென்னாட்டில் சிலர் தங்களது ஊர்களை வடவரிட்ட பெயராலேயே அழைத்து வருதல் காணலாம். இது வடமொழியின்மீது உள்ள பற்றினால் எழுந்ததே ஆகும். இந்த வகையில் கேரளம் எனும் சொல் வழக்கினையே பெரிதும் விரும்பி வழங்கி வந்தனர்.

நாடும் எல்லைகளும்

சேர மன்னர்களைக் கூறும் முக்கியச் சங்ககால நூல்களை நோக்குவோமானால் நாட்டினது பரப்பும் அதன் எல்லைகளும் குறிக்கப் பெறும். பதிற்றுப்பத்து, அகநானூறு, புறநானூறு. சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் பார்ப்போமாயின் சேர நாட்டில் அடங்கியுள்ள பகுதிகள் குட்டநாடு, குடநாடு, பூழிநாடு, குன்ற நாடு, மலைநாடு, கொங்கு நாடு, பொறைநாடு, முதலியன ஆகும். இதில் அயிரைமலை, நேரிமலை, செருப்புமலை, அகப்பாக்கோட்டை, உம்பற்காடு, நறவுத் துறைமுகம், முசிறித் துறைமுகம், தொண்டித் துறைமுகம் ஆகிய இடங்களும் அடங்கும். பல அரசர்கள் வஞ்சியையும், சிலர் மாந்தையையும் தலைமைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். சேர மன்னர்களின் இவ்வஞ்சி நகரைப்பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுள்ளது. 'சேரன் வஞ்சி' எனும் சிறந்த நூலை எழுதிய சா. கிருட்டினசாமி என்பார் சேர நாட்டில் பெரியாறு என்னும் ஆற்றின் அருகில் உள்ள கரூர்ப்பட்டினமே சேரர்களது வஞ்சிமாநகர் என்று குறிப்பிட்டுள்ளார். இதையே திரு கனகசபைப் பிள்ளையவர்களும், திரு. கே. ஜி. சேஷய்யரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். கொங்கு நாட்டில் உள்ள கரூர் ஆனிலை என்ற நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள இடத்தையும் பிற்காலச் சேரர்களே வென்று தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொண்ட பிறகு அதற்குச் 'சேரர் கொங்கு' என்ற பெயரும் வழங்கினர். எனவே, சேர நாட்டில் உள்ள கரூர்ப்பட்டினமே சங்கநூல்களில் கூறப்பெரும் வஞ்சிமா நகரம் எனக் கொள்ளவேண்டும். இவர்களது நல்லாட்சியை ஓரளவு உறவுமுறையுடன் தெரிந்துகொள்ள மேற்கூறிய நூல்கள் துணைபுரிகின்றன. அவற்றை ஒரு முறைப்படுத்தித் தெளிவான முறையில் நோக்கினால் அவர்களது வரலாற்றை அறியமுடியும்.


  1. Inscriptions of Sri Vira Rajendra (Rajakesari Varman) S.I.I. Vol. III.