பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



1. சேர அரசர்கள்

பதிற்றுப்பத்து என்பது சங்ககால நூல்களில் ஒன்று. இது ஒரு தொகுப்பு நூல். இதில் பத்துப்புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன என்பது பதிற்றுப்பத்து என்னும் நூலின் பெயரால் தெரியவருகிறது. ஒவ்வொரு புலவரும் ஒவ்வோர் அரசனைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அந்தப் பாடல்கள் முதற்பத்து, இரண்டாம் பத்து, மூன்றாம் பத்து என்னும் முறையில் எண் குறியீட்டுப் பெயரால் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முதல் பத்தும் பத்தாம் பத்தும் இதுவரை கிடைக்கவில்லை. இடையிலுள்ள எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன.

கிடைத்துள்ள இந்த எட்டுப் பத்துகளில் எட்டுப் புலவர்கள் எட்டுச் சேர அரசர்களைப் பாடியுள்ளனர்.

இந்த எட்டுப் பேர்களில் ஐந்துபேர் ஒரு கால்வழியினராகவும், எஞ்சிய மூன்றுபேர் மற்றொரு கால்வழியினராகவும் இருந்தவர்கள் என்னும் உண்மையைப் பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்த ஆசிரியரின் பதிகக் குறிப்பு வாயிலாக அறிகிறோம்.

பத்துப் புலவர்களின் பாடல்களை ஒன்றுதிரட்டிப் பதிற்றுப் பத்து என்னும் பெயருடன் நூலாக்கிய தொகுப்பாசிரியர் இன்னார் என்று தெரியவில்லை. எனினும், அந்தப் புலவரும் சங்க காலத்தவரே ஆவார். இந்தப் பதிற்றுப்பத்து நூலைச் சங்க நூல்களில் இறுதியாகத் தோன்றியவற்றுள் ஒன்று எனச் சிலர் கூறுகின்றனர். எனவே, பதிற்றுப் பத்துச் சேர அரசர்களைப் பற்றி இவர் தரும் பதிகச் செய்திகளை நாம் வரலாற்று உண்மை.

பதிற்றுப்பத்து நூலைத் தொகுத்தவர் ஒவ்வொரு பத்துப் பாடல்களைப்பற்றியும் பதிகம் என்னும் பெயரில் சில தெளிவான உண்மைகளைத் தெரிவிக்கின்றார். இந்தத் தொகுப்பாசிரியர் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு சிறப்புப் பெயர் இட்டுள்ளார்; இன்னின்ன சிறப்புப் பெயர் கொண்ட பாடல்கள் இன்னின்னபத்தில் அடங்கியுள்ளன என்றும் கூறியுள்ளார். இந்தப் பத்துப் பாடல்களையும் பாடிய புலவர் இன்னார் என்பதும், அவரால் பாடப்பட்ட அந்தப் பத்து