பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

221

ஆனால், இவனும் தன்னுடைய வாயிற் காவலான சுபன் என்பவனால் கொல்லப்பட்டான்.

யஸ்லாலக திஸ்ஸனுடைய வாயிற்காவலன் சுபன் என்பவன். அந்தச் சுபன் உருவத்தில் இவ்வரசனைப் போலவே இருந்தான். ஆகவே, அரசன் சுபனுக்குத் தன்னைப்போல ஆடையணிவித்து விளையாட்டாக வேடிக்கை பார்ப்பது வழக்கம். காவற்காரனாகிய சுபன் அரச ஆடைகளுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் போது அமைச்சர்கள் சென்று, அவனை அரசன் என்று எண்ணிக் கொண்டு வணங்கும்போது காவல்காரன் வேஷத்தில் வாயிலில் இருக்கும் உண்மையான அரசன் நகைத்து வேடிக்கை பார்ப்பான். அடிக்கடி இப்படி நிகழ்ந்தது. ஒரு நாள் காவற்கார சுபன் சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்த போது காவற்காரன் வேஷத்தில் வாயிலில் இருந்த அரசன் உரத்துச் சிரித்தான். அதனைக் கண்ட சுபன் சினந்து, 'இந்தக் காவலன் ஏன் இப்படிச் சிரிக்கிறான். இவனைக் கொண்டுபோய்ச் சிரச்சேதம் செய்யுங்கள்' என்று கட்டளையிட்டான். அக்கட்டளைப்படியே அவனைக் கொன்றுவிட்டார்கள். பிறகு காவலாளியாயிருந்த சுபன், சுபராசன் என்னும் பெயருடன் இலங்கையை யரசாண்டான் (Mahavamsa, xxxv. 51-56).

சுபராசன்:

சுபராசன், கி.பி. 118 முதல் 124 வரையில், ஆறு ஆண்டு அநுராத புரத்திலிருந்து இலங்கையை யரசாண்டான். சுபராசன் ஆட்சிக்கு வந்தபோது, அவனை வசபன் என்னும் பெயருள்ள ஒருவன் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுவான் என்று நிமித்திகர் கூறினர். ஆகவே, சுபராசன் தன் இராச்சியத்தில் உள்ள வசபன் என்னும் பெயருள்ள வர்களையெல்லாம் கொன்றுவிடும்படி கட்டளையிட்டான். இவனுடைய சேனைத்தலைவனுக்கு உறவினன் ஒருவன் வசபன் என்னும் பெயர் படைத்திருந்தான். அந்தச் சேனைத்தலைவன், அரசன் கட்டளைப்படி தன் உறவினான வசபனை அரசனிடம் கொடுக்க எண்ணினான். அவனுடைய எண்ணத்தை அவனுடைய மனைவியாகிய பொத்தா என்பவள் மூலமாக அறிந்த வசபன் தப்பி ஓடி உரோகண நாட்டுக்குச் சென்றான். சென்று தனக்கு ஆக்கந் தேடிக்கொண்டு சேனையைத் திரட்டினான். பிறகு, அரசன்மேல் படையெடுத்து வந்து போர்செய்து வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனுடைய உறவினனான சேனைத்தலைவன் போரில் இறந்து விட்டான்.