பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


இன்ன சேர அரசனைச் சிறப்பித்துக் கூறுகிறது என்பதும், அந்தச் சேர அரசன் இன்னார்க்கு இன்னஉறவுமுறையினன் என்பதும் அவரது பதிகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மற்றும் இந்தப் புலவர் அந்தச் சேர அரசனை இந்தப் பத்துப் பாடியதற்காக இன்ன பரிசுபெற்று இவ்வாறு சிறப்பிக்கப்பட்டார் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அரசன் இத்தனை ஆண்டுகள் அரசனாய் விளங்கினான் என்னும் செய்தியையும் குறிப்பிட்டுள்ளார். நாம் இந்தச் செய்திகளை யெல்லாம் வரலாற்று உண்மைகள் என்றே கொள்ளவேண்டும்.

உதியன் கால்வழி

பதிற்றுப்பத்தில் இரண்டு கால்வழியைச் சேர்ந்த அரசர்கள் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளனர் என்று கூறினோம். அவற்றுள் ஒன்று இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனையும், அவன் தம்பியையும், ஆண் மக்கள் மூவரையும் கொண்ட ஒரு கால்வழியாகும், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தை உதியஞ்சேரல் என்று கூறப்பட்டுள்ளான். இந்த உதியஞ்சேரலுக்கு முன்னோன் என்று சான்றுடன் இவனது கால் வழியில் கூறத்தக்கவர் யாரும் தெரியவில்லை. ஆதலால், இந்தக் கால் வழியை நாம் உதியன் கால்வழி என்று குறிப்பிடலாம். இந்த வகையில் உதியன், உதியன் மகன் நெடுஞ்சேரலாதன், நெடுஞ்சேரலாதனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன், நெடுஞ்சேரலாதனின் மக்கள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற முறையில் ஆறு சேர அரசர்களை நாம் அறிய முடிகிறது.

அந்துவன் கால்வழி

மற்றொரு கால்வழி மூன்று அரசர்களைச் சிறப்பித்துப் பாடுகிறது என்று கூறினோம். இந்த மூவருள் முன்னவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆவான். இவன் தந்தை அந்துவன் என்று கூறப்படுகிறான். எனவே, இவர்களது கால்வழியை அந்துவன் கால்வழி என்று குறிப்பிடலாம். இந்த வகையில் அந்துவன் கால்வழி அரசர்கள் நான்குபேர்