பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர்

23


ஆவர். அந்துவன், அந்துவன் மகன் செல்வக்கடுங்கோ, செல்வக்கடுங் கோவின் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை, மற்றும் குட்டுவன் இரும் பொறை ஆகியோரே அந்த நால்வர். இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தை குட்டுவன் இரும்பொறையையும் கணக்கில் சேர்த்துக் கொண்டால் இந்த மாந்தரஞ்சேரல் கால்வழி அரசர்கள் ஐவர் எனக் கொள்ளலாம்.

இந்த ஐந்து அரசர்கள் பெயரிலும் 'பொறை' என்னும் அடைமொழி உள்ளது. இதனால் இவர்களைப் 'பொறையர்க்குடி அரசர்கள்' என்று குறிப்பிடுதலும் உண்டு. பொறை அரசர்கள் என்று நோக்கும்போது, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, மாந்தரன் பொறையன் கடுங்கோ முதலான அரசர்களையும் ஒன்றுசேர்த்து எண்ணவேண்டும்.

இனி, நாம் மேலே கண்டவாறு உதியன் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் ஆறு பேர், அந்துவன் குடியைச் சேர்ந்த சேர அரசர்கள் நான்கு பேர். ஆக மொத்தம் பத்துச் சேர அரசர்களைச் சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காண்கிறோம்.

இந்தப் பத்துச் சேர அரசர்களின் வரலாற்றைப் பதிற்றுப்பத்து என்னும் நூலை அடிப்படைச் சான்றாகக்கொண்டு நாம் ஆராயும்போது, புறநானூறு, அகநானூறு முதலான பிற சங்கப் பாடல்களிலிருந்தும், சங்ககாலக் கல்வெட்டுகளிலிருந்தும் தெரியவரும் செய்திகளையும் ஆங்காங்கே இணைத்துக் காண்கிறோம். பின்னர், முறையே பிற நூல்களில் காணும் சேர அரசர்களையும், சேரமான் புலவர்களையும் காண்போம்.

உதியஞ்சேரல்

உதியஞ்சேரல்[1]. செங்குட்டுவனின் பாட்டன்[2]. வீரமும் கொடையும் இவனது வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றன.

போர்த்திறன்

'நாடுகண் அகற்றிய உதியஞ்சேரல்'[3] என்று இவன் குறிப்பிடப் படுகின்றான். நாட்டின் பரப்பை விரிவாக்கினான் என்பதே இதன் பொருளாகும். இதனால், இவன் தன் முன்னோரிடமிருந்து நாட்டுப் பகுதி


  1. நற். 113 : 9; அகம். 65 : 5, 168 : 7, 233 : 8
  2. பதிற். பதி. 2 : 3
  3. அகம். 65 : 5