பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


ஒன்றைப் பெற்றிருந்தான் என்பது தெளிவாகிறது. இவன் முன்னோர் சேர அரசர்களாய் முடியாட்சி புரிந்து வந்தனர் என்பது விளங்குகிறது.

பேய்க்குப் பெருஞ்சோறு

உதியஞ்சேரல் நாட்டின் பரப்பை விரிவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான். இதனால், அவன் பகைவர்கள் காழ்ப்புணர்ச்சி கொண்டனர். 'முதியர்' என்னும் குடியினர் பாண்டியர்க்குப் பகைவர்; சேரருக்கு நண்பர்[1]. முதியர் குதிரைப் படையில் சிறந்து விளங்கினர். இந்தக் குடியினரைப் பகைவர்கள் தாக்கினார்கள். முதியர்களில் பலர் மாண்டனர். செய்தி அறிந்த உதியஞ்சேரல் முதியர்களுக்குத் துணை வந்தான். பகைவர்கள் பலர் மாண்டனர். அவர்களின் உடல் குறுகியதும், நெடியதுமாய் வீழ்ந்து பல பேய்கள் கூட்டத்திற்குப் பெருஞ்சோறாய்[2] அமைந்தன.

கொடை நலம்

இவனைப் பாடிக்கொண்டு புலவர்கள் பலர் சென்றனர். அவர்களெல்லாம் மனம் மகிழும்படி இவன் கொடை வழங்கினான். இவனை மாமூலனார் 'உதியஞ்சேரற் பாடிச் சென்ற பரிசிலர்'[3] எனவும் 'தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்'[4] எனவும் அவன் கொடை வழங்கிய காட்சியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

குழுமூர்ச் சோற்றுமடம்

குழுமூர் என்பது ஓர் ஊர். அவ்வூரில் வாழ்ந்தவர்கள் ஆடு மாடு மேய்த்து வாழும் ஆயர்கள். இவ்வூரைச் சூழ்ந்த பகுதியில் ஆங்காங்கே குன்றுகளும் நிழல் தரும் மரங்களும் உண்டு. ஆயர்கள் ஆங்காங்கே அம்மரநிழல்களில் தங்குவர். அதுவே உதியனின் சோற்றுமடமாகும்[5]. 'உதியன் அட்டில்' என்றும் இது வழங்கப்பட்டது. இதற்குக் கைம்மாறாக இவன் ஆயர்களிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. இந்த மடத்தில் உணவு உண்ணும் ஒலி, அருவியில் ஒலிக்கும் ஒலியின் எதிரொலிபோல் கேட்டது.


  1. பதிற். பதி. 3 : 4
  2. அகம். 233 : 6 - 10
  3. அகம். 65: 5 - 6
  4. ஷை 233 : 7 - 8
  5. ஷை 168 : 4 - 7