பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

25


பண்புநலம்

இவன் குற்றமற்ற சொற்களையே பேசுவான், உண்மையே பேசுவான். 'வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றுந் தீமை இலாத சொலல்' என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தான் என்று கூறலாம்; கொடை வழங்குதலைத் தன் கடமை என எண்ணிச் செய்தான்; கோணாத தன் நெஞ்சு விரும்பியவாறு செய்தான். நிலம், விசும்பு, காற்று, தீ, நீர் என்னும் ஐம்பெரும் பூதங்களின் இயற்கைக் குணங்களாகிய பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளி போல் இவன் தனக்குப் பகைவர் பிழை செய்தபோது அப்பிழையைப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும், அவரை அழித்தற்கேற்ற மனவலியும், அவ்வாற்றலால் அவரை அழித்தலும், அவர் வழிபட்டால் அவருக்குச் செய்யும் அருளும் உடையோனாவான்[1].

இசை வேட்கை

இவன் இனிய இசையுடன் முரசுகளை முழக்கி மகிழ்வது உண்டு என்பது 'இன்னிசை முரசின் உதியஞ்சேரல்'[2] என்று குறிப்பிடுவதால் தெரிகிறது. இவன் போர் புரியும்போது இயவர்கள் (இசைக் கருவிகள் முழங்குவோர்) ஆம்பலங் குழல்களால் ஊதினார்கள்[3].

மனைவி மக்கள்

இவனது மனைவி நல்லினி ஆவாள். இவள் வெளியன்வேள் என்பவனின் மகள் ஆவாள். இவனுக்கும் நல்லினிக்கும் பிறந்த ஆண் மக்கள் இருவராவர். மூத்தவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்; இளையவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆவான்[4].

ஒப்புநோக்கம்

சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பாரதப்போரில் இருதரத்துப் படைகளுக்கும் சோறு வழங்கினான். அவன் வேறு, இவன் வேறு. அவனைப் பற்றிய செய்தியினைப் பிற சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ்க் காணலாம்.


  1. புறம். 2 : 1 - 8
  2. பதிற். பதி. 2 : 2
  3. நற். 113 : 11
  4. பதிற். பதி. 2 : 3