பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

275

குறுக்கிட்டுத் தடுத்தது என்று கூறப்படுகிறது. இதில் ஏதோ தவறு இருக்கிறதுபோலத் தோன்றுகிறது. ஏடெழுதுவோரால் மோகர் என்று எழுதப்பட வேண்டிய சொல் மோகூர் என்று எழுதப்பட்டதுதான் அந்தப் பிழை என்று தோன்றுகிறது.

மோகர் என்பவர் துளு நாட்டில் (கொங்கண நாட்டில்) கடற்கரை யோரத்தில் வாழ்ந்திருந்த நெய்தல் நில மக்கள். தமிழ்நாட்டு நெய்தல் நில மக்களாகிய பரதவரைப் போலவே, அவர்களும் அடங்காமல் போர் செய்வதில் விருப்பமுள்ளவராக இருந்தனர். அவர்களுடைய சந்ததியார் இன்றும் துளு நாட்டுக் கடற்கரையில் மோகர் என்னும் பெயருடன் இருக்கிறார்கள். அந்த மோகர், கோசருக்குப் பணி யாமையால், அவரை அடக்கக் கோசர், மோரியருடைய உதவியை நாடினார்கள். கோசருக்கு உதவிசெய்ய வந்த மோரியரின் தேர்ப் படைகள் செல்லாதபடி சையகிரி என்னும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் குறுக்கே இருந்தபடியால், அம்மலையைக் கடந்தாலல்லது வேறு வழி இல்லாதபடியால், அவர்கள் மலைமேல் பாதை அமைத்துக் கொண்டு அப்பாதை வழியாகத் துளு நாட்டுக்குள் சென்று, பிறகு கடற் கரையோரத்தி லிருந்த மோகருடன் போர் செய்து அடக்கினார்கள் என்பது தெரிகின்றது. இந்தச் செய்தியைக் கூறுகிற செய்யுளில் பிற் காலத்தில் ஏடெழுதினோர் மோகர் என்பதை மோகூர் என்று கைப் பிழையாக எழுதினார்கள் போலும். ஏடெழுதுவோர் செய்த சிறுபிழை இக்காலத்து அறிஞர்களின் ஆராய்ச்சிக்கு அதிக வேலை கொடுத்து விட்டது. அந்தச் செய்யுளின் சரியான வாசகம் இவ்வாறு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது:

தெம்முனை சிதைத்த ஞான்றை மோகர் பணியா மையிற் பகைதலை வந்த

மாகெழு தானை வம்ப மோரியர்

புனைதேர் நேமி யுருளிய குறைத்த

இலங்குவெள் அருவிய அறைவாய் உம்பர்.

எனவே, மோகூர் என்பது தவறான பாடம் என்பதும் மோகர் என்பதே சரியான பாடம் என்பதும் தெரிகின்றது.

இதுகாறும் கூறியவற்றால், மோரியர் மோகூரின்மேல் படை யெடுத்து வரவில்லை என்பதும், அவர்கள் துளு நாட்டின் மேல் படை யெடுத்துச் சென்றனர் என்பதும், அவ்வாறு செல்லும் வழியில் குறுக்கே