பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

27


என்று சிறப்பித்துப் பாராட்டப்படுகிறான். எனவே, நெடுஞ்சேரலாதன் இந்தப் போரில் தானே நேரில் ஈடுபடாமல் தன் மகனை அனுப்பி வெற்றிகொண்டானோ என எண்ண வேண்டியுள்ளது.

அரபிக்கடல் தீவுகள் நெடுஞ்சேரலாதனின் ஆட்சிக்குட்பட்டிருந்தன. நெடுஞ்சேரலாதன் அப்பகுதிகளில் வயவர்களை அமர்த்தி நாடு காவல் புரிந்து வர ஏற்பாடு செய்தான். அத்தீவுகளில் அதற்கு முன்னர் ஆட்சி புரிந்து வந்த மன்னர்கள் வயவர்களோடு போரிட்டு அவர்களை வீழ்த்தித் தம் நாடுகளைக் கவர்ந்து கொண்டனர்[1]. மேலும், இவர்கள் நெடுஞ்சேரலாதனுக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சினமுற்றுச் சேரலாதன் இப்போரில் ஈடுபட்டான்[2].

கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வெட்டி வீழ்த்தியவனைச் சிலப்பதிகாரம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. சில இடங்களில் கடம்பு எறிந்த செயலும், இமய மலையில் வில்லைப் பொறித்த செயலும் இணைத்துப் பேசப்படுகின்றன[3]. ஓரிடத்தில் செங்குட்டுவனை 'வாய் வாட்கோதை' என்று குறிப்பிட்டு, கடம்பு எறிந்ததும் வில் பொறித்ததும் அவனது செயல்கள் என்று கூறப்படுகின்றன[4]. ஓரிடத்தில் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் கண்டு வாழ்த்தும் பராசரன் எனும் பார்ப்பான் கடம்பு எறிந்ததும், இமயத்தில் வில்லைப் பொறித்ததுமாகிய செயல்களை அவனது செயல்கள் என்று கூறுவதைக் காண்கிறோம்[5].


  1. பதிற். 20 : 3 முரணியோர்
  2. காவல் மரத்தின் அடிப்படையில் குடிமக்களுக்குப் பெயர் அமைந்தமைக்கான சான்றுகள் இல்லை. பாண்டியர் காவல் மரம் வேம்பு. அவர்களை வேம்பர் என்று குறிப்பிடும் வழக்கம் இல்லை. இவ்வாறே புன்னை, அத்தி, பனை முதலான மரங்களைக் காவல் மரமாக உடைய நாட்டு மக்களும், அவ்வகை மரப் பெயரால் அழைக்கப்படுவதில்லை. 'கடம்பர்' என்னும் சொல் நமக்கு யாண்டும் ஆட்சியில் இல்லை. தக்கணத்தில் இருந்த கதம்பர் வேறு. அரபிக் கடல் தீவுகளில் கடப்ப மரத்தைக் காவல் மரமாகக் கெண்டிருந்த அரசு வேறு. பாடல்களில் கடம்ப வெட்டப்பட்டது என்று மட்டுமே உள்ளது. அறிஞர்கள் கடம்பர்களை ஓட்டினான் என்று குறிப்பிடுகின்றனர். இவர்கள் கடற்கொள்ளைக்காரர்கள் என்றும், மேலைநாட்டு வாணிகக் கப்பல்களை வழிப்பறி செய்து வந்தனர் என்றும், வழிப்பறியைத் தடுக்கும் முயற்சியில் நெடுஞ்சேரலாதன் இப்போரில் ஈடுபட்டு வெற்றிபெற்றான் என்றும் கூறுகின்றனர். இவற்றிற்குச் சான்றுகள் இல்லை. ஆய்வுக்குரியன.
  3. சிலப். 23 : 81, 29 : 1, 25 : 187, 28 : 135, 29 : உரைப்பாட்டு மடை
  4. ஷை 25 : 1 - 3
  5. ஷை 23 : 81 - 82