பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

29


பிணிக்கப்பட்ட யவனர்கள் யார் என்பதில் அறிஞர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. மேலைநாட்டுக் கடல் வாணிகராகிய யவனர்கள் என்று சிலரும், வடநாட்டில் வாழ்ந்த சாக யவனர் என்று சிலரும் கருதுகின்றனர். சாக யவனரின் கூட்டத்தார் என்று கூறும் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி, வெளிநாட்டுச் செலாவணியில் நாட்டின் பொருளியலை வளப்படுத்திய மேலைநாட்டு வாணிகக் குழுவினராகிய யவனரைப் பிணித்தான் என்பது பொருந்தாது என்கிறார். வடநாட்டு யவனர் வடுகரைப் போன்றும். ஆரியரைப் போன்றும் நேரே தமிழகத்தில் ஊடுருவாமல் அரபிக்கடல் தீவுகளுக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்பது மறுசாரார் கருத்து. இந்தக் கருத்துகள் உய்த்துணரப்பட்டவையாகத் தென்படுகின்றன.

யவனர் யாவர் என்பதை, கிடைக்கும் அடிப்படைச் சான்றுகளை வைத்துக்கொண்டு தீர்மானிப்பதே நல்லது. யவனரின் பாவை விளக்கு,[1] அன்ன விளக்கு, [2] கட்குடம்[3] ஆகியவை சிறப்பு மிக்க பொருள்கள் எனப் பேசப்படுகின்றன. யவனரின் மரக்கலங்கள் முசிறித்துறைமுகத்திற்குப் பொன்னைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு மிளகு மூட்டைகளை ஏற்றிச் சென்றதையும் நாம் காண்கிறோம்.[4] இதனால் இவர்கள் பிற நாட்டிலிருந்து கடல் கடந்து வந்த வாணிகர்கள் என்பது தெளிவாகிறது. இவர்கள் புகார் நகரத்திற்கு வாணிகத்தின்பொருட்டு வந்திருந்து தங்கியிருந்ததையும் நாம் காண்கிறோம்.[5] மதுரை நகரில் யவனர்கள் வாளைக் கையில் ஏந்திக்கொண்டு கோட்டை வாயிலில் காவல்புரிந்து வந்ததைக் காணும்பொழுது.[6] யவனர்கள் சிலர் தமிழ் நாட்டிலேயே தங்கி வாழ்ந்தனர் என்பதை அறிகின்றோம். இவ்வாறு தங்கியவர்களில் புகார் நகரில் தங்கியவர் மாடமாளிகைகளில் வாழ்ந்ததையும், மதுரையில் தங்கியவர் கோட்டையைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததையும் நாம் பார்க்கிறோம்.

சேர அரசன் ஒருவன் யவனர்களின் வளநாட்டை ஆண்டான் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.[7] இந்த அரசன் இந்த யவனர் நாட்டுடன் தென்குமரி, இமயம் ஆகிய எல்லைக்குட்பட்ட நாட்டையும் ஆண்டான் என்று அங்குக் கூறப்பட்டுள்ளது. யவனர் நாடு தென்குமரி,


  1. நெடுநல். 101
  2. பெரும்பாண். 316 - 317
  3. புறம். 56 : 18
  4. அகம். 149 : 9 - 11
  5. சிலப். 5 : 10
  6. ஷை 14 : 66 - 67
  7. ஷெ 28 : 141 - 142