பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


இமயம் ஆகிய எல்லைகளுக்கு உட்பட்டதென்பது விளங்காத காரணத்தால் அந்தச் சேர அரசன் ஆண்ட யவனர் நாட்டையும் இதனுடன் இணைத்துக் கூற வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த யவனர் நாடு எது?

மேலே கூறியபடி தென்குமரி, இமயம் இவ்விரு எல்லைக் குட்பட்ட நாட்டை ஆண்ட சேர அரசன் நெடுஞ்சேரலாதன்[1]. இவன் கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தை வீழ்த்தினான். கடப்ப மரம் மேற்குக் கடற்கரையை அடுத்த தீவுகளில்[2] இருந்த காவல் மரம். இந்தக் காவல் மரத்தை உடையவர்கள் அந்தத் தீவு மக்கள். மேலை நாடுகளிலிருந்து அரபிக்கடல் வழியே கலம் செலுத்தி வாணிகம் செய்துவந்த யவனர்கள் இந்த இலக்கத் தீவுகளில் தங்கினார்கள். அங்கிருந்த மக்களைத் தம் வாணிகத்திற்குத் துணையாகக் கொண்டனர்.

சேர நாட்டில் இவர்கள் செய்துவந்த வாணிகத்தில் ஏதோ ஒரு வகையில் தவறு நேர்ந்திருக்கலாம். அந்தத் தவற்றுக்குக் கடம்புத் தீவுகளிலிருந்த மக்களும் உடந்தையாயிருந்திருக்கலாம். அரசன், தவற்றினைத் திருத்த அவர்களோடு போரிடவேண்டியதாயிற்று. இந்தப் போரின் விளைவுதான் காவல் மரமாகிய கடப்பமரம் வெட்டியதும். அதனால் முரசு செய்துகொண்டதும், யவனரைக் கைது செய்து கொண்டு வந்ததும், பிறகு அவர்களது செல்வத்தைச் சேரநாட்டு மக்களுக்கு வழங்கியதும் ஆகிய நிகழ்ச்சிகளாகும்.

இமயம் வரை வெற்றி

நெடுஞ்சேரலாதன் இமயமலையில் தன் சேரர்குடிச் சின்ன மாகிய வில்லைப் பொறித்துவிட்டு மீண்டான் எனப் பதிகம் கூறுகிறது. பதிகம், பதிற்றுப்பத்தைத் தொகுத்தவரால் பிற்காலத்தில் உருவாக்கப் பட்டது. பாடல் தோன்றிய காலமே அந்தந்த மன்னர்களுக்குரிய காலம். இவன் காலத்தில் பாடப்பட்ட இரண்டாம் பத்துப் பாடல்களில் இமயத்தில் வில் பொறித்த செய்தி கூறப்படாமையை எண்ணவேண்டியுள்ளது.

குமட்டூர்க் கண்ணனார் நெடுஞ்சேரலாதன்மீது பத்துப் பாடல்கள் பாடிச் சிறப்பித்த காலத்தில் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில்லைப் பொறித்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த நிகழ்ச்சி இவனது


  1. பதிற். 11 : 24
  2. இக்காலத்தில் இலக்கத்தீவுகள் என வழங்கப்படுகின்றது