பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


போர் ஆகும். இவ்வாறு புகழ் நாட்டும் போர்களிலும், தற்காப்புப் போர்களிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.

தமிழ்நாட்டு அரசர்களை வலியச் சென்று தாக்கும் செயலை இவன் செய்யவில்லை. தமிழ்நாட்டு அரசர்கள் யாராக இருந்தபோதிலும் தன்னைச் சேர்ந்தவர்கள் என்றே இவன் கருதினான். தன்னை வலிய வந்து எதிர்த்த வடநாட்டு அரசர்களைத் தாம் இவன் பகைவர்களாகக் கருதினான்; தமிழ்நாட்டு அரசர்கள் வலிய வந்து எதிர்த்தாலும் அவர்களை இவன் பகைவர்களாகக் கருதவில்லை. இவனது உணர்வை அறிந்திருந்த பதிற்றுப்பத்துத் தொகுப்பாசிரியர் வடநாட்டில் இவன் சேரநாட்டுப் புகழ் விளங்கும்படி செய்தான் என்று கூறாமல் தமிழகத்தின் புகழ் விளங்கும் படி செய்தான் எனக் கூறியுள்ளார்.

இவன் இமயத்தில் வில்லைப் பொறிக்கும்போது புலியையும் கெண்டையையும் சேர்த்துப் பொறித்ததும் உண்டு[1].

இவனது இந்த ஒருமைப்பாட்டு உணர்வுகள் போற்றுதலுக்கு உரியவையாகும்.

போர்ப்புறம் வேற்போர்

நெடுஞ்சேரலாதன் சேரநாட்டில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்து வருகையில் கொங்குநாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு அந்துவஞ்சேரல் இரும்பொறை ஆட்சிசெலுத்தி வந்தான். இவர்கள் காலத்தில் சோழநாட்டை ஆண்டுவந்த வேந்தன் வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி என்றும் பெரு விறற்கிள்ளி என்றும் அழைக்கப் பட்டான்.

நெடுஞ்சேரலாதனுக்கும். இந்தச் சோழ அரசனுக்கும் போர் மூண்டது. அந்தப் போரானது 'போர்'[2] என்னுமிடத்தில் நடைபெற்றது. சோழன் அவனைப் 'போர்' என்ற நகரத்திற்கு வெளியே எதிர்த்துப் போராடினான். போரில் இருதிறத்துப் படைகளும் அழிந்தன. இறுதியில் வேந்தர் இருவரும் நேரில் வேற்போரில் ஈடுபட்டனர். கிள்ளியானவன் வேற்போரில் வல்லவன் என்பது அவனது பெயரிலேயே விளங்கும். இருபெருவேந்தரும் போரில் சாய்ந்தனர்[3].


  1. சிலப். 29 ஊசல்வரி 25 : 2
  2. அகம், 326 : 10 - 11
  3. புறம், 62 : 7 - 8, 63 : 10