பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர்

35


நெடுஞ்சேரலாதன் உயிர் நீங்குகின்ற நிலையில் நெடுநேரம் போர்க்களத்திலேயே கிடந்தான். அப்போது கழாத் தலையார் என்னும் புலவர் அவனைக் கண்டு பாடி அவனது கழுத்தில் இருந்த ஆரத்தைப் பரிசிலாகக் கேட்டார். அவனும் வழங்கினான்; பின்னர் மாண்டான்.

இவனுக்குப்பின் சேரநாட்டின் தலைமைப் பொறுப்பினைச் செங்குட்டுவன் ஏற்றான் என்பதைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வரலாறு உணர்த்துகிறது.

கொடைத்தன்மை

இவன் சிறந்த வள்ளல் ஆவான். இவன் நாட்டில் பருவ மழை பொய்த்தல் இல்லை. அப்பருவமழையே தவறிவிட்டாலும் பரிசிலர் விரும்பிவந்த பொருள்களை இவன் அளிப்பதில் தவறியதில்லை[1]. இவனது கைகள் பிறருக்குக் கொடுத்துக் கொடுத்து மிகுந்த வளமை பெற்றிருந்தன[2]. இவனது கொடைத்தன்மையைப் பகைவர்களும் புகழ்ந்தனர்[3].

இவன் கொடையில் கர்ணணனைப் போன்றவன் என்று குமட்டூர்க் கண்ணனார் இவனை ஒப்புமைப்படுத்திப் பாடியுள்ளார்[4]. இவன் உயிர் நீங்கும் நிலையில் போர்க்களத்தில் கிடந்திட்டபோது இவனைக் கண்டு பாடிய கழாத்தலையார் இவனது கழுத்தில் இருந்த மணிமாலையைப் பரிசிலாகக் கேட்டுப் பெற்றார். கண்ணனானவன் கர்ணனிடம் அவன் செய்தபுண்ணியங்களை யெல்லாம் தானமாகக் கேட்டு அவன் இறக்கும் தறுவாயில் இருந்தபோது பெற்ற நிகழ்ச்சி இதனோடு பொருத்தமாய் அமைந்துவிட்டது. முன்னர்ப் புலவர் பாடிய ஒப்புமையானது பின்னர் உண்மை நிகழ்ச்சியாய் அமைந்துள்ளது.

பாடினி,[5] விறலியர்,[6] புலவர், வயிரியர், ஓவியர், சிற்பத் தொழில்களில் வல்ல கண்ணுளர்[7] முதலான பலருக்கு இவன் கொடை வழங்கினான். பரிசில்பெற வந்தவர் பெறத் தகுதியற்றவராய் விளங்கினாலும் அவர்களது அத்தன்மையைப் புறத்தார் உணராவண்ணம் மறைத்துவிட்டு நல்கினான்[8].


  1. பதிற். 18 : 10 - 13, 20 : 22 - 24
  2. ஷை 15 : 36 - 37
  3. ஷை 20 : 25 - 28
  4. ஷை 14 : 5 - 7
  5. ஷை 14 : 17, 17: 14
  6. ஷை 18 : 6
  7. ஷை 20 : 15 - 17
  8. ஷை 20 : 23 - 24