பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

39


இவன் நெடுஞ்சேரலாதனுக்குத் தம்பி; செங்குட்டுவனுக்குச் சிறிய தந்தையாவான்.

பூழியர்கோ

நெடுஞ்சேரலாதன் சேரநாட்டு முடிவேந்தனாய் ஆண்டபோது இவன் பூழி நாட்டில் இருந்துகொண்டு நாடுகாவல் புரிந்து வந்தான். பின்னர்ப் பூழி நாட்டை ஆண்டு கொண்டிருந்ததால் 'பூழியர்கோ'[1] என்று கூறப்பட்டான்.

பூழி நாடானது செருப்பு மலையைத் தன்னகத்தே கொண்டது. செருப்பு மலையில் மணிக்கற்கள் கிடைத்தன. கோவலர் தம் ஆடு மாடுகளைப் புல்வெளிகளில் மேய விட்டுவிட்டு இச்செருப்பு மலையில் கிடைத்த மணிக்கற்களைத் திரட்டி விற்று வாணிகம் செய்துவந்தனர். அக்கால மக்கள் அந்த மணிக்கற்கள் பதித்த அணிகலன்களை விரும்பி அணிந்துவந்தனர்[2]. இந்தப் பூழி நாட்டுக் கோவலர்களுக்கு முல்லைப்பூ குடிப் பூவாகும்.

மழவர் மெய்ம்மறை

மழவர்கள் கொங்கு நாட்டு மக்கள். அவர்களுள் ஒரு சாரார் குவியற் கண்ணியைத் தம் முடியில் அடையாளச் சின்னமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் சேரர்களின் துணைவர்களாய் விளங்கினர். மழவரில் மற்றொரு சாரார் பாண்டியனைச் சார்ந்திருந்தனர். பல்யானைக் குட்டுவன் குவியற்கண்ணி மழவரின் பாதுகாவலனாகக் கவசம் போல் விளங்கினான்[3].

அயிரைப் பொருநன்

ஓர் ஊரில் தங்கியிருந்து ஆண்ட அரசனை அவ்வூரின் பொருநன் எனக் குறிப்பிடுவது வழக்கம். அயிரை மலையிலிருந்த கொற்றவை சேரர்களின் குடித்தெய்வம். இதனை இவன் வழிபட்டான்[4]. இவன் பல நாள்கள் வழிபாட்டில் ஈடுபட்டு அயிரை மலையில் தங்கி யிருந்தான். அதனால், 'அயிரைப் பொருநன்'[5] என்னும் சிறப்பினைப் பெற்றான்.

உம்பற்காட்டு வெற்றி

'உம்பல்' என்னும் சொல்லுக்கு யானை என்னும் பொருள் உண்டு. எனவே, உம்பற்காடு என்பது ஆனைக்காடு என்று பொருள்படும். ஆனைமலைப் பகுதியில் இருந்த காடு இப்பெயர் பெற்றிருந்தது.


  1. பதிற். 21 : 23
  2. ஷை 20 : 23
  3. ஷை 21 : 24
  4. ஷை 30 : 34 'அருந்திறல் மரபிற் கடவுட் பேணியர்' பதி. 3 : 8 'அயிரை பரைஇ'
  5. ஷை 21 : 29