பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


ஆனைமலைக்கு வடக்கில் இருந்தது பூழி நாடாகும். உம்பற்காடானது அப்போது இவனது ஆட்சியின்கீழ் இருந்திருக்க வேண்டும். பூழி நாட்டில் ஆண்ட இவன் உம்பற் காட்டின்மீது படையெடுத்துச் சென்று, வென்று தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்[1].

அகப்பாக் கோட்டையை அழித்தல்

பாகுடி என்பது ஊரின் பெயர்[2]. இந்த ஊர், பெருமலைகளுக்கு இடையே இருந்ததால்[3] அகப்பாக்குடி எனப்பட்டு, 'அகப்பா' என மருவியும் வழங்கப்பட்டது. உம்பற்காட்டைத் தன் ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்த பல்யானைக் குட்டுவன் அகப்பாக்கோட்டையைத்தாக்கி வென்று தீக்கிரையாக்கினான்[4]. இக்கோட்டையைக் கைப்பற் வேண்டும் என்பதே அவன் நோக்கம்[5].

அகப்பாக் கோட்டை மிக வலிமையானது. உயர்ந்த மதிற்சுவர்; அதில் வரிசை வரிசையாகப் பதுங்குமிடங்கள்; மதிற்சுவரை அடுத்து ஆழமான அகழி; அகழியைச் சுற்றிக் காவற்காடு.

கோட்டைக்குள்ளே நுழைய உயர்ந்த நிலைவாயில்; வாயிற் கதவைச் சாத்தித் தாழிடுவதற்காக வில்விசை முறைப்படி மாட்டித் தொங்கும்படி அமைக்கப்பட்ட கணையமரம்; வாயிலுக்கு முன் அகழியைக் கடக்கும் மரப்பாலம்; பாலத்திற்கு வெளியே போரிடுவதற்காக அமைக்கப்பட்ட வெட்டவெளி; வாயிலிலும் காவற்காட்டிலும் இருந்துகொண்டு கோட்டையைக் காக்கும் நாற்படைகள். இத்தனை பாதுகாவலையும் கொண்டது அகப்பாக் கோட்டை[6] ஆகும்.

அகப்பாக் கோட்டையைச் சூழ்ந்திருந்த மலை தலைமலை ஆகும்[7] இப்பகுதியில் முதியர் என்னும் மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பாண்டியரின் ஆட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தனர்[8].


  1. பதிற். பதி. 3 : 2
  2. பதிற். 21 : 26 - இது மயிலை சீனி. வேங்கடசாமியின் கருத்து
  3. ஷை 22 : 26 'அண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த'
  4. ஷை பதி, 3 : 3
  5. பதிற். 22 : 27 'உழிஞைசூடி'
  6. ஷை 22 : 26
  7. பதிற். 22 : 26 'அண்ணலம் பெருங்கோடு' - கோபி வட்டம்
  8. ஷை பதி. 3 : 4 'மதியுறழ் மரபின் முதியர்'; மதி = திங்கள் குலத்தவராகிய பாண்டியர், உறழ் = முரண்பாடு