பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


கெழுகுட்டுவனின் தாக்குதலால் அழிவுற்றது[1]. இந்த நிலையில் எஞ்சிய படையையும் தாக்கும் பொருட்டு இவன் தன் படைவீரர்களுக்குப் பெருஞ்சோறு வழங்கிப் போர் விழா நடத்தினான். அப்போது போர்வீரர்கள் வஞ்சினங் கூறலாகிய மந்திரம் சொல்லிக் கடவுளை (அயிரைமலைக் கொற்றவை) வழிபட்டனர். பகைவரின் தார்ப்படை தாக்கியபோது தாம் பெற்ற விழுப்புண்களில் வழியும் குருதியைத் தூவிப் படையின் வெற்றி முரசை முழக்கினர். இந்த முரசொலியின் எழுச்சிமிக்க ஒலியைக்கேட்டு இவனது எதிரிப் படையினர் காடுகளிலும், கடற்பகுதிகளிலும் ஓடி ஒளிந்துகொண்டனர்;[2] எனவே, தொடர்ந்து போரிடாமல் போர்க்களத்தைவிட்டு நீங்கினர். இதன் விளைவால் எதிரியின் நாடுகளில் சில பகுதிகள் அழிவைப் பெற்றன[3].

போர் முறை

பல்யானைச் செல்கெழு குட்டுவன் போர்க் காலங்களில் படைவீரர்கள் தங்கியிருந்த அறைகளிலேயே உடன் தங்கியிருந்து ஊக்கமூட்டினான்;[4] குதிரைகள் பூட்டிய தேரில் சென்று போரிட்டான்[5]. வீரர்கள் தம் வேல்களில் இருந்த புலித்தோல் உறைகளை நீக்கிவிட்டு வெற்றிக்கு அறிகுறியாக வலத்தோளால் அவற்றை உயர்த்தியபோதே வெற்றி மாலையை இவன் சூடிக் கொண்டான். அவனே அவர்களின் படைத்தலைவனாக விளங்கினான்[6].

'பெரும்படைத் தலைவ', 'வயவர்', 'இருக்கை இயலறைக் குருசில்' என்னும் தொடர்களைக் கொண்டு இவன் பெரும் படைத்தலைவனாகவே விளங்கினான் என்று கருத இடமுண்டு; அரசனாக விளங்கவில்லை எனவும் எண்ணலாம். ஆனால், 'கடுஞ்சினவேந்து'[7] என இவன் கூறப்படுவதால் இவன் வேந்தனாகவும் விளங்கினான் என்பது பெறப்படுகிறது.


  1. 'மைத்துமலி பெரும்புகழ் அறியார் மலைந்த போர் எதிர் வேந்தர் தார்அழிந்து ஒராஅலின்' (பதிற். 23 : 16 - 17) 'பணைகெழு வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து' (பதிற். 30 : 30)
  2. பதிற். 30 : 31
  3. ஷை 23 : 20 - 25
  4. ஷை 24 : 12 - 14
  5. ஷை 25 : 1
  6. ஷை 24 : 5
  7. ஷை 30 : 44 ஒப்புநோக்குக. 'பாடினிவேந்து' (பதிற். 17 : 14)>