பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

43


இருகடல் நீரில் ஒருபகல் ஆடல்

இரண்டாம் பத்தில், இமயத்தில் வில்பொறித்த நிகழ்ச்சி குறிப்பிடப்படாமல் அதன் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல மூன்றாம் பத்தில் 'இருகடல் நீரும் ஒருபகல் ஆடிய' நிகழ்ச்சி[1] அதன் பதிகத்தில் மட்டும் கூறப்பட்டுள்ளது. மற்றும் இவன் நெடும் பாரதாயனார் வழிநின்று காடுபோந்த நிகழ்ச்சியும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சிகள் மூன்றாம் பதிகம் பாடப்பட்டபின் நிகழ்ந்தவை எனலாம். இவன் 25 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்தான். இம் மூன்றாம் பத்தானது இவனது இருபதாம் ஆண்டில் பாடப்பட்டதாகவும், அண்ணனுக்குப்பின் தம்பி, 5 ஆண்டுகள் கழித்து அரியணை யேறினான் என்றும் கொண்டால், இரண்டாம் பத்துப் பாடப்பட்ட பின் சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து மூன்றாம் பத்துப் பாடியிருக்க வேண்டும் என்பது தெரியவரும். அப்போது அவனைப் பாடிய புலவர் விருப்பப்படி பத்து வேள்விகள் செய்துவிட்டுத் தொடர்ந்து ஆண்டு வரும்போது 'இருகடல் நீரும் ஒருபகல் ஆடிய' நிகழ்ச்சி நடைபெற்றிருக்க வேண்டும்.

தன் யானைப் படையின் ஒரு பகுதியை வங்கக் கடலுக்கும் மற்றொரு பகுதியை அரபிக் கடலுக்கும் அனுப்பிக் கடல் நீரைக் கொண்டுவரச் செய்தான். அந்த இரண்டு கடல் நீரையும் ஒரே நாளில் ஊற்றிக்கொண்டு திருமுழுக்காடியபின் இவன் காடு போந்தான்.

பகைவர் நாட்டு அழிவு - தன் நாட்டு வளம்

இவனது ஆட்சிக்குக் கீழிருந்த நாட்டில் வெள்ள நீர் மோதிக் கேட்கும் பூசல் ஒலி அல்லாது மக்கள் கொடுமைகளுக்குள்ளாகி ஓலமிட்டு அழும் பூசல் ஒலி கேட்டதே இல்லையாம்[2]. இவனை எதிர்த்த பகைவர்களது நாடுகள் வளம் நிறைந்தவையாய் இருந்து, இவனால் அழிக்கப்பட்டுப் பொலிவிழந்து காணப்பட்டனவாம்[3].


  1. பதிற். பதி. 3 : 7
  2. பதிற். 27 : 13 - 15
  3. ஷை 22 : 38, 23 : 13, 25 : 9, 27 : 1, 29 : 10