பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


முருகன் என்னும் மன்னனின் சீற்றத்திற்குள்ளாகிய உரும்பில் கூற்றம் அழிந்தது போல அவை அழிந்துபோயினவாம்[1].

கொடைத்தன்மை

மழை, பருவத்தில் பெய்ய மறந்தாலும் இவன் வந்தவர்களுக் கெல்லாம் உணவளித்தான்[2]. மரபுக் கடவுளைப் பேணுவதற்காக இவன் செய்த வேள்வி 'பெரும் பெயர் ஆவுதி' எனப்பட்டது. தன்னை நாடி வந்தவர்களுக்கு உணவளிக்க இவன் செய்த வேள்வி 'அடுநெய் ஆவுதி' எனப்பட்டது[3]. வயிரியர் தம் வறுமைக் காலத்திலும் பிறரிடம் கையேந்தும் வழக்கம் இல்லை; பொதுவிடங்களில் தம் இசைக்கருவிகளை முழக்குவர். மக்கள் தாமே முன்வந்து அவர்களுக்கு வழங்கிப் பேணுவர். இத்தகைய வயிரியர்களுக்குப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் பொன் அணிகலன்களையும் உணவுப் பொருள்களையும் வழங்கினான்[4]. தம் கொடை முரசை முழக்கி அவர்களைத் தானே அழைத்து வழங்கினான்[5].

தன்னைப் பத்துப் பாடல்களில் சிறப்பித்துப் பாடிய புலவர்க்கு அவர் விருப்பப்படி இவன் கொடை வழங்கியுள்ளான். அக்கொடை பத்து வேள்வியாக அமைந்தது. இத்தகைய வேள்விகளை இவனும் பிற வேந்தர்களும் சங்ககாலத்தில் செய்ததற்கெல்லாம் கொடை உள்ளமே காரணம்; வேந்தர்கள் விருப்பம் அன்று என்பதை இவனது வேள்வி நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது.

பாலைக் கௌதமனார் மூன்றாம் பத்தில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்களைப் பாடி முடித்தார். புலவர் வேண்டியதைக் கேட்டுப் பெறலாம் என்றான் வேந்தன். பார்ப்பனப் புலவர் தாமும் தன் மனைவியும் வானுலகம் புக வேண்டினர். புலவரின் விருப்பத்தை


  1. ஷை 26 : 12 - 14 முருகன் என்னும் நற்பேர் கொண்ட அரசன் பொதினி மலையை ஆண்டுவந்ததும், இவனுக்கு நெடுவேளாவி எனச் சிறப்புப் பெயர் இருந்ததும், இவன் மழவர் இனத்தவரைப் புறங்கண்டோடச் செய்து அவர்களின் நாட்டைவிட்டு விரட்டினான் என்பதும் மாமூலனார் அகம். 1 - லும், இவனது சீற்றத்தைப் பாண்டரங்கண்ணனார் புறம், 16-லும் கூறுவது இவ்விடத்துக் கருதத்தக்கது.
  2. பதிற். 24 : 28 - 30
  3. ஷை 21 : 7 - 13
  4. ஷை 23 : 6 - 8
  5. ஷை 23 : 8 - 9