பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


சிலகாலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்துவிட்டுப் பின் துறவு பூண்டான் பல்யானைச் செல்கெழு குட்டுவன். அண்ணன் தொடர்ந்து நாடாண்டு கொண்டிருந்தான் (இளங்கோவடிகள் தன் சிறிய தந்தையான பல்யானைச் செல்கெழு குட்டுவனின் துறவு வழியை இளமையிலேயே பின்பற்றினார்).

முன்னோர்

சினம், காமம், கழிகண்ணோட்டம், அச்சம், பொய்ச்சொல், அன்பு மிகவுடைமை, தெறல், கடுமை முதலான தீய பண்புகள் அறநெறியில் செல்லும் ஆட்சிக்குத் தடையாய் அமைந்துவிடும் என்னும் உண்மையை உணர்ந்து அந்தத் தீய பண்புகளை விட்டு, நல்லன பல செய்து இவனது முன்னோர் வாழ்ந்து வந்தனர். நாட்டுமக்கள் மாசற்ற தெளிவான அறிவினை உடையவர்கள்; பிறரை நலியாதவர்கள்; வேற்றவர் பொருளைப் பறிக்க விரும்பாதவர்கள்; செந்நெறியில் நடப்பவர்கள்; தம்மை விரும்பி வாழும் துணைவரைப் பிரியாதவர்கள்; பிணியின்றி வாழ்ந்தமையால் மூத்துப் பின்னர்தான் இறந்தனர். இவ்வாறு குடிமக்கள் வாழும்படி பல்யானைச் செல்கெழு குட்டுவனது முன்னோர் அரசாட்சி செலுத்தினார்களாம். இத்தகைய உரம் பெற்ற முன்னோரின் வழிவந்து, அவர்களைக் காட்டிலும் மேம்பட்டு உயர்ந்து விளங்கினானாம் பல்யானைக் குட்டுவன்[1].

மனைவியின் மாண்பு

இவன் மனைவி சிறந்த உடலழகும் ஒப்பனை அழகும் கொண்டவள். இவனுடன் இவள் அரியணையில் வீற்றிருந்தாள்[2]. இவளது கற்பு நெறியால் நாட்டில் பருவமழை தவறாமல் பெய்தது[3]. கணவனைப் போலவே இவளும் திருந்திய இயல்மொழியைப் பேசினாள்[4]. பலரும் இவளைத் தம் பாடல்களில் போற்றிப் புகழ்ந்தனர். அவற்றை அவள் விரும்பவில்லை; உலக மெல்லாம் தன் கணவன்வழி ஒழுகும்படி தன்


  1. பதிற். 22 : 10 - 11
  2. ஷை 21 : 37 'இவள்' என்னும் சுட்டுக்குறிப்பை நோக்குக.
  3. ஷை 21 : 37 – 38
  4. மலையாளம் தோன்றக் காரணமாயிருந்த திரிசொற் கொச்சை மொழி அக்காலத்து அரும்பியதுபோல் உள்ளது. அதனை அவள் பேசாது செந்தமிழ் பேசியது கண்ட புலவர் வியந்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.