பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

47


வாழ்க்கைப் பாங்கை அமைத்துக் கொண்டாள். எனினும் ஆறு தொழில்களைச் செய்யும் அந்தணர்களின் சொற்களை இவள் வழி மொழிந்து ஒழுகியது நமக்கு வியப்பைத் தருகிறது. 'கணவன் எவ்வழி மனைவி அவ்வழி' என்பதே நாம் காணும் அமைதி.

சிறப்புப் பெயர்கள்

'செல்போர்க் குட்டுவன்',[1] 'பொலந்தார்க் குட்டுவன்',[2] 'பெரும் பல்யானைக் குட்டுவன்'[3] என்றெல்லாம் இவன் அடை மொழிகளுடன் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளான். பதிகம் இவனைப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்று குறிப்பிடுகிறது. பல யானைகள் சேர்ந்த கூட்டமானது மேகக்கூட்டம்போல் காட்சி அளிக்கும். அதனைப் 'பல்யானைச் செல்'[4] எனக் குறிப்பிடலாம். அந்த யானைகளாகிய மேகக் கூட்டத்திடையே இவன் மிகுதியும் தோற்றமளித்ததால் பல்யானைச் செல்கெழு குட்டுவன் எனப்பட்டான்.

பாலைக் கௌதமனார்

இவர் இவன்மீது பாடியுள்ள பத்துப் பாடல்கள் பதிற்றுப் பத்தில் மூன்றாம் பத்தாக அமைந்துள்ளன. பொதுவாகக் 'குட்டுவன்' என்று குறிப்பிட்டுச் செய்திகளைத் தெரிவிக்கும் பாடல்கள் உள்ளன. அந்தக் குழப்பங்கள் பிற சேர அரசர்கள் என்னும் தலைப்பின்கீழ் ஓரளவு தெளிவாக்கப்பட்டுள்ளன.

நார்முடிச் சேரல்

'களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்' என்று முழுமையான அடைமொழிகளுடன்கூடிய பெயரால் கூறப்படும் இவன், செங்குட்டுவனது மாற்றாந்தாயின் மகன் ஆவான்; செங்குட்டுவனுக்கு மூத்தவன், தந்தை நெடுஞ்சேரலாதன் ஆவான். தாய் பதுமனின் மகளாவாள். இந்தப் பதுமன் வேளிர் குடியில் ஒரு பிரிவான ஆவியர் குடியைச் சேர்ந்தவன். இந்த ஆவியர்குடி பழனிமலைப் பகுதியில் சிறப்புற்று விளங்கியது.


  1. பதிற். 22 : 27
  2. ஷை 23 : 10
  3. ஷை 29 : 14
  4. செல் = கார்மேகம்