பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


நன்னன் போர்

வாகை மரத்தைக் காவல் மரமாகக்கொண்டு நன்னன் எழில் மலைப் பகுதியில் அரசாண்டு வந்தான். அவனுக்கும் நார்முடிச் சேரலுக்கும் போர்மூண்டது. போர் 'வாகைப் பறந்தலை' என்னுமிடத்தில் நடைபெற்றது. இந்த இடம் குடமலைக்கு மேற்குப் பக்கம் இருந்தது. போரில் நன்னன் கொல்லப்பட்டான்[1]. அவனது காவல் மரம் 'வாகை' வெட்டிச் சாய்க்கப்பட்டது.

இந்த வெற்றிக்குப்பின் மகிழ்வால் நறவுண்டு மகிழ்ந்தும், இரவலர்களுக்கு வாரி வழங்கியும் இவன் இருந்தான். பின் நேரிமலைப் பகுதிக்குச் சென்று தங்கியிருந்தான்.

இப்போரில் வென்றதன் வாயிலாக நார்முடிச் சேரல் தான் முன்பு இழந்த நாட்டைத் திரும்பப் பெற்றான் என்று கல்லாடனார் கூறுகிறார். இழந்த நாடு எது என்பதனை அறியப் பதிகம் நமக்கு உதவி செய்கிறது. அது 'பூழி நாட்டைப் படையெடுத்துத் தழுவிக்கொண்டான்' என்று கூறுகிறது.

பழனிமலைப் பகுதியில் சிறப்புற்று விளங்கிய ஆவியர்குடிப் பதுமனிடம் இவன் பெண் கொண்டதால் அவர்களின் உதவியும் இப்போரில் கிடைத்திருக்கும். பூழி நாடு பழனி மலைகளுக்கு வடக்கில் உள்ள நாடு.

நெடுமிடல் சாய்தல்

நெடுமிடலை நார்முடிச் சேரல் போரில் சாய்த்தான் எனக் காப்பியாற்றுக் காப்பியனார் கூறுகிறார். நெடுமிடல் பசும்பூட் பாண்டியனின் பகைவர்களால் சாய்க்கப்பட்டவன் எனப் பரணர் கூறுகிறார். மற்ற இரண்டையும் ஒப்பிட்டு நோக்கும்போது பசும்பூட் பாண்டியனின் பகைவனான நார்முடிச் சேரல் நெடுமிடலைக்[2] கொன்றான் என்பது பெறப்படுகிறது.

எவ்வி என்பவனின் மிழலை நாட்டை நெடுஞ்செழியன் (தலையாலங்கானத்துச் செருவென்றவன்) கைப்பற்றினான் என்பது வரலாறு. இதனால் எவ்விக்கும் பாண்டியருக்கும் இடையே பகைமை


  1. பதிற். 40 : 14; பதிற். பதி. 4 : 7 - 8; அகம். 199 : 20
  2. பதிற். 32 : 10; அகம், 266 : 12