பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

53


பென்பது ஊடியும் கூடியும் இல்லற நெறியில் வழுவாது கணவனுடன் வாழ்வது, ஏனைய ஆறிய கற்பும், சீறிய கற்பும் இன்றி அவளது கற்பு அறக்கற்பாய் அமைந்தது.

தழைத்த கூந்தல், காதிலே குழை, அந்தக் குழைக்கே ஒளி நல்குவது போல் அமைந்து ஒளிரும் நெற்றி, மார்பிலே பொன்னாலான இழைகள், அந்த இழைகளுக்கு ஒளி ஊட்டுவது போல் விளங்கி அழகுத் தெய்வம் பிய்த்துத் தின்னும் உத்தி. இத்தகைய நலங்களுடன் அவள் விளங்கினாள்.

காப்பியனார்

காப்பியாறு என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் காப்பியனார் என்னும் பெயரைப் பெற்றார். காப்பியன் என்பது காப்பியம் இயற்றியமையால் வழங்கப்பட்ட பெயர் என்றும் தெரிகிறது. தொல்காப்பியனார், பல்காப்பியனார் என்னும் பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கின்றன. இந்தக் காப்பியனார் காப்பி ஆற்றின்மீது காப்பியம் பாடியதால் காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் பெயரைப் பெற்றார் எனக் கொள்வது பொருத்தமாயிருக்கும். காப்பியாறு இப்போது வழங்கும் கபினி என்னும் ஆறாக இருக்கலாம்.

பதிற்றுப்பத்தில் உள்ள இவர் பாடிய பத்துப் பாடல்களில் ஒரு புதுமையான அமைப்பைக் காண்கிறோம். இந்தப் பாடல்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளதே அந்தப் புதுமையாகும். ஒரு பாடலின் கடைசிப் பகுதி அடுத்த பாடலின் முதற்பகுதியில் அமையும்படி அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை, பதிற்றுப்பத்து 34, 35, 38 ஆம் பாடல்களின் கடைசி அடி அப்படியே அடுத்த பாடலின் முதல் அடியாக அமைந்திருப்பதையும், பிற பாடல்களில் (இறுதிப் பாடல் நீங்கலாக) இறுதியில் உள்ள இரண்டு சீர்கள் அடுத்த பாடலின் தொடக்கத்தில் அமைந்திருப்பதையும் நாம் பார்க்கிறோம்.

இந்தப் புலவர் திருமால்மீது பற்றுடையவர்போல் காணப்படுகிறார். மாலைக் காலத்தில் துளசி மாலைச் செல்வனை மக்கள் வழிபடுவதாகவும் நார்முடிச் சேரலின் மார்பு திருமாலிருஞ் சோலை மலை (விண்டு விறல்வரை) போல் இருப்பதாகவும் இவர் கூறுவதால்[1] இவரது திருமால் பற்று விளங்குகிறது.


  1. பதிற். 31 : 7 - 10