பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


இவர் மாலைக் காலத்துக் காட்சிகளில் மகிழ்ந்து திளைத்துள்ளார். மாலைக் காலத்தில் திருமால் கோயிலின் மணி கேட்பதும், மக்கள் குளிர்ந்த நீர்த்துறைகளில் நீராடிவிட்டு வந்து திருமாலின் திருவடிகளைப் பரவுவதும் இவரது உள்ளத்தைக் கவர்ந்துள்ளன[1].

போர்க்களத்தில் பேய்களும், முண்டங்களும் ஆடுவதும், குருதி பாய்ந்து செக்கச் செவேலெனத் தோன்றுவதும் அந்திமாலையில் தோன்றும் வானக் காட்சிகளை நினைவுக்குக் கொண்டு வருகின்றன[2].

செங்குட்டுவன்

பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனும், சிலப்பதிகாரத்தில் காணப்படும் சேரன் செங்குட்டுவனும் ஒருவனே.

பெற்றோர்

குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் இவனின் தந்தையாவான். 'சோழன் மணக்கிள்ளி' என்பவள் இவனது தாய் ஆவாள்[3].

தாயின் பெயர் சோழ அரசனின் பெயராகவும், ஆண் மகனின் பெயராகவும் அமைந்திருப்பதைப் பிற பெயர்களை ஒப்புநோக்கி அறியலாம். இக்காலத்தில் கணவன் பெயருக்கு முன் 'திருமதி' என்னும் அடைமொழியைச் சேர்த்து மனைவியின் பெயராகக் குறிப்பிடும் வழக்கம்போல, அக்காலத்தில் எல்லாரும் அறிந்த தந்தையின் பெயரால் மகளைக் குறிப்பிடும் வழக்கம் இருந்ததை இந்தப் பெயர் காட்டுகிறது. திருமணமாகு முன்னர்ப் பெண்டிரைத் தந்தையார் பெயரோடு தொடர்புபடுத்தியோ, தந்தையின் பெயரால் குறித்தோ வந்தது தெரிகின்றது[4].

சிலப்பதிகாரப் பதிகத்துக்கு அடியார்க்கு நல்லார் உரையில் 'சேரலாதற்குச் சோழன் மகள் நற்சோணை ஈன்ற மக்களிருவருள்' என்னும் தொடர் உள்ளதால் 'சோழன் மணக்கிள்ளியீன்ற மகன்'


  1. ஷை 31 : 6 - 9
  2. ஷை 35 : 6 - 9
  3. பதிற். பதி. 5 : 2 - 3
  4. இந்த நிலையை மையமாகக் கொண்டு டாக்டர் ச. சோ. பாரதி சேரநாட்டில் 'மருமக்கள் தாயமுறை' வழக்கத்தில் இருந்தது என்று வேறு வகையில் விளக்கம் கூறுகிறார். இந்த முடிவு வேறு பிற சான்றுகளைக் கொண்டு முடிவுசெய்ய வேண்டியதாகும்.