பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


அறுகை என்பவன் அக்காலத்தில் இருந்த மற்றுமோர் அரசன். இவன் குன்றத்தூரில் இருந்து ஆட்சி புரிந்து வந்தான்[1]. இந்த அறுகை செங்குட்டுவனது நண்பன். செங்குட்டுவனது அண்ணன் நார்முடிச் சேரல் குன்ற நாட்டில் தனது ஆட்சியைத் தொடங்கினான். அவன் இருபத்தைந்தாண்டுகள் அரசாண்டான். அண்ணனுக்குப் பின் சுமார் ஐந்தாண்டுகள் கழித்துத் தன் ஆட்சியைத் தொடங்கி ஐம்பத்தைந்தாண்டுகள் செங்குட்டுவன் அரசாண்டான். எனவே, 35 ஆண்டுகள் (55-20) அண்ணனுக்குப் பிறகு அரசாண்டான். அக்காலத்தில் அண்ணனது குன்ற நாட்டுப் பகுதியைக் குன்றத்தூரில் இருந்து கொண்டு இந்த அறுகை ஆண்டு வந்தானாகையால், சேரர்களுக்கு அவன் நண்பனாக விளங்கினான். வஞ்சிக்கும் குன்றத்தூருக்கும் இடைவெளி சற்று அதிகமாக இருந்ததாலும்[2]. செங்குட்டுவனுக்கும் இந்த அறுகைக்கும் நட்பு நீடித்திருக்கிறது.

மோகூர்ப் பழையன் அறுகையைத் தாக்கி வென்றான் போலும். அறுகையைப் பிடித்து வந்து சிறையில் மறைத்து வைத்துக் கொண்டனர்[3]. தன் நண்பனை மறைத்துவைத்த செய்திகேட்டுப் பொறுக்காத செங்குட்டுவன் பழையனை அவனது மோகூரிலேயே தாக்கினான்.

இந்தப் போரில் பழையனுக்குத் துணையாகப் பாண்டியனும் சோழனும் சேர்ந்து கொண்டனர். அன்றியும் வேளிர் அரசர்கள் பலரும் சேர்ந்து கொண்டனர். இவர்களுக்கும், செங்குட்டுவன் படைக்கும் பெரும்போர் நடந்தது. போர்க்களத்தில் குருதியாறு வெள்ளம்போல் ஓடிற்று.

செங்குட்டுவன் பழையனது காவல் மரமாகிய வேப்ப மரத்தை வெட்டிச் சாய்த்தான்; அவனது கோட்டைகள் பலவற்றைக் கடந்தான்; பழையன் கூறிய வஞ்சின மொழிகள் பொய்யாகும்படி வெற்றி பெற்றான். போரில் பழையன் மாண்டான் எனலாம். அவனது வீரர்களும் மாண்டனர்.


  1. துரைசாமி பிள்ளை, ஔவை, மு. கு. நூ., பக் 160
  2. 'சேண னாயினுங் கேளென மொழிந்து' (பதிற் 44 : 11)
  3. 'ஒளித்த களையாப் பூசல்' (பதிற். 44 : 12)