பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

57


தம் கணவன்மார் போரில் மாண்டது கண்டு மோகூரிலிருந்த அவர்களது மனைவியர் கைம்மைக் கோலம் பூண்டனர். கைம்மைக் கோலத்திற்குத் தலைமுடியை மழித்துக் கொள்வது அக்கால வழக்கம். அவ்வழக்கப்படி அவர்கள் மொட்டை அடித்துக் களைந்தெறிந்த முடியைக்கொண்டு கயிறு திரித்து அக்கயிற்றால் தான் வெட்டி வீழ்த்திய வேப்பமரத் துண்டை யானைகளோடு பிணித்துச் செங்குட்டுவன் தன் நாட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தான். அம்மரத்தால் தன் வெற்றிமுரசைச் செய்துகொண்டான்.

குராலம் பறந்தலைப் போர்

மோகூர்ப் போரில் வென்று திரும்புகையில் பழையனது நண்பர்களாக விளங்கிய சில அரசர்கள் செங்குட்டுவனைத் தாக்கினர். அவர்களை இவன் குராலம் பறந்தலை என்னுமிடத்தில் தாக்கி வென்றான்[1].

நேரிவாயில் போர்

சோழநாட்டு உறையூரின் தென்வாயில் நேரிவாயில் எனப் பெயர் பெற்றிருந்தது. பதிற்றுப்பத்தில் 'வாயிற்புறம்' என்று கூறப்படுவதும் இதுவேயாகும். செங்குட்டுவனது மைத்துனர் கிள்ளிவளவன் ஆவான். கிள்ளிவளவன் சோழநாட்டுப் பெரு வேந்தனாவதைச் சோழர் குடியைச் சேர்ந்த ஒன்பது மன்னர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்கள் கிள்ளிவளவனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். செங்குட்டுவன் தன் மைத்துனனுக்கு உதவ முன்வந்தான்.

நேரிவாயிலில் அப்போர் நடைபெற்றது. செங்குட்டுவன் வெற்றிபெற்றான். ஒன்பது குடை மன்னர்களும் ஒரே பகற் பொழுதில் அழிக்கப்பட்டனர்[2]. கிள்ளிவளவன் அரசனாக்கப் பட்டான்.

வியலூர்ப் போர்

வியலூர் என்பது சேரநாட்டின் வடபகுதியில் இருந்த ஓர் ஊர். சிறுகுரல் நெய்தல் வியலூர், வயலை வேலி வியலூர். விரிநீர் வியலூர் என்றெல்லாம் இந்த ஊர் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இந்த


  1. பதிற் 44 : 19; சிலப். 27 : 118 - 123, 28 : 116 - 117
  2. பதிற். பதி. 5 : 19