பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


வியலூரில் செங்குட்டுவனுக்கு எதிரான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனால், செங்குட்டுவன் இந்த ஊரைத் தாக்கி அழித்தான்[1].

கொடுகூர்ப் போர்

வியலூருக்கு வடபால் ஓர் ஆறு ஓடிற்று. அந்த ஆற்றின் வடகரையில் கொடுகூர் என்னும் ஊர் இருந்தது. வியலூரில் செங்குட்டுவனிடம் தோற்ற படையின் சார்பாளர் கொடுகூரில் செங்குட்டுவனைத் தாக்கினர். செங்குட்டுவன் அவர்களுடன் போரிட்டு அவ்வூரையும் அழித்தான்[2].

இடும்பில் போர்

இது சோழநாட்டு ஊராகும். இவ்வூர் தேவாரத்தில் 'இடும்பாவனம்' என்றும் இக்காலத்தில் இரும்பாதவனம் என்றும் வழங்கப்படுகிறதென்பர்[3]. செங்குட்டுவன் வெட்சிப் பூச்சூடி ஆனிரைகளைக் கவரும் போரில் ஈடுபட்டான். அவன் தான் கவர்ந்துவந்த ஆனிரைகளை இந்த ஊரின் புறத்தே இளைப்பாற்றிப் பின் தன் நாட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தான். ஆனிரைகளுக்கு உரியவர்கள் இவனை அவ்வூரில் எதிர்த்துத் தாக்கினர். நடந்த போரில் செங்குட்டுவன் வெற்றி பெற்றான்.

கொங்குநாட்டுப் போர்

சோழ அரசனும் பாண்டிய அரசனும் சேர்ந்து கொங்கு நாட்டில் செங்குட்டுவனைத் தாக்கினர். இந்தத் தாக்குதலில் போர்க்களம் குருதியால் செங்களம் ஆகியது. இந்தப் போரில் செங்குட்டுவன் வெற்றி பெற்றான்;[4] களவேள்வி செய்து வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தான்.

தக்கணப் போர்

வஞ்சிக் காண்டத்தில் தக்கணப் போர் பற்றிய செய்தி காணப்படுகிறது,[5] தமிழ்நாட்டின் வடஎல்லைப் பகுதிகளில் பல்வேறு குடியைச் சேர்ந்தவர்கள் செல்வாக்குப் பெற்று விளங்கினர்.


  1. ஷை 5 : 11 - 14
  2. ஷை 5 : 12
  3. கோவிந்தன், புலவர், கா. 'சேரர்’, 46
  4. சிலப். 35 : 152 - 155, 29 : உரைப்பாட்டுமடை
  5. சிலப். 25 : 156 - 159