பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


செங்குட்டுவன் சார்பில் சென்று இமயத்தில் கண்ணகிக்குக் கல்லெடுத்து வந்து தர விழைவதாக அவன் கூறினான். கல்லெடுப்பதோடு கனவிசயர்க்குப் பாடம் கற்பிப்பதே தன் நோக்கமாகையால் தானே செல்ல விரும்புவதாகவும், நூற்றுவர்கன்னர் விரும்பினால் செங்குட்டுவன் கங்கையைக் கடக்க உதவி செய்யலாம் என்றும் அத்தூதனிடம் கூறினான்.

சஞ்சயன் போனபின் சட்டை அணிந்த தென்னவர் ஆயிரவர் செங்குட்டுவனுக்குத் திறை தந்து தம் அரசன் பாண்டியன் அளித்த வாழ்த்து மடலையும் தந்தனர்.

பின்னர்ச் செங்குட்டுவன் படை நடத்திச் சென்று கங்கை ஆற்றை அடைந்தான். ஆற்றைக் கடக்க நூற்றுவர் கன்னர் உதவினர். செங்குட்டுவன் தன் படையுடன் கங்கையின் வட கரையை அடைந்தான்.

வடநாட்டு அரசர்கள் கனக விசயர் தலைமையில் திரண்டனர். உத்தரன், விசித்திரன், உருத்திரன், பைரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் ஆகியோர் அவ்வாறு திரண்டவர்களில் சிலராவர். இவர்கள் செங்குட்டுவனை எதிர்த்துத் தாக்கினர்[1].

கடும்போர் நிகழ்ந்தது. செங்குட்டுவன் தும்பை சூடி நூழில் போரில் ஈடுபட்டான். போர் மொத்தத்தில் 18 நாழிகைதான் (சுமார் 7 மணி நேரந்தான்) நடைபெற்றது. செங்குட்டுவன் வெற்றி பெற்றான். கனகவிசயர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் மற்றும் 52 பேர் போர்க்களத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையை அறிந்த ஏனைய வடநாட்டு அரசர்கள் துறவிக்கோலம் பூண்டு தப்பி ஓடினார்கள். இவன் தன் வஞ்சினத்தை முடித்துக்கொண்டான். இமயமலையில் கண்ணகிக்குக் கல் எடுத்தான்; கனகவிசயர் தலையில் சுமத்திக் கொண்டு வந்து கங்கையில் நீராட்டினான்.

தோற்ற ஆரிய அரசர்கள் கங்கை ஆற்றின் தென்கரையில் செங்குட்டுவனுக்குப் பாடிவீடு அமைத்துக் கொடுத்தனர். அந்தப் பாடி வீட்டில் இருந்துகொண்டு தன் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த தனது வீரர்களுக்கெல்லாம் சிறப்புச் செய்தான். அப்போது தமிழ் நாட்டிலிருந்து வந்த மறையவன் மாடலனுக்குத் தன் எடைக்கு எடை பொன்னைப் பரிசிலாகக் கொடுத்தான்[2]. நூற்றுவர்கன்னர்க்கு நன்றி-


  1. ஷை 182 - 187
  2. சிலம். 27 : 175 - 176