பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

63


யுடன் விடை கொடுத்து அனுப்பினான்; பின்னர்த் தன் நாட்டுக்குத் திரும்பினான்.

செங்குட்டுவன் அறவேள்வி ஒன்று செய்தான். அப்போது தன் நாட்டுச் சிறையில் இருந்தவர்களையெல்லாம் விடுதலை செய்தான். மற்றும் தான் கைது செய்து வந்திருந்த கனக விசயரையும் விடுதலை செய்தான். வஞ்சி நகருக்கு வெளியே பூஞ்சோலையில் இருந்த வேளாவிக்கோ மாளிகையில் அவர்களை விருந்தினர்களாகத் தங்க வைத்தான்.

கடவுள் பத்தினிக்குச் சிலைசெய்து கோயில் கட்டி வழிபாடு செய்தான். அந்த வழிபாட்டு விழாவில் தமிழ்நாட்டு அரசர்களுடன் பிற நாட்டு அரசர்களும் கலந்துகொண்டனர். விடுதலை பெற்ற கனக விசயரும், அவர்களுடன் சிறைபிடிக்கப்பட்டு விடுதலை பெற்ற வடநாட்டு அரசர் 52 பேரும், குடக நாட்டுக் கொங்கர், மாளுவ நாட்டு வேந்தர், இலங்கை அரசன் கயவாகு ஆகியோரும் விழாவில் கலந்து கொண்ட சிலர் ஆவர். இவர்கள் தம் நாட்டிலும் கண்ணகிக்குக் கோயில் அமைக்க இருப்பதாகவும், அமைத்து வழிபடும்காலை பத்தினித் தெய்வம் வந்திருந்து அருள்புரிய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர்.

இவன் வஞ்சியில் இருந்து புறப்பட்டது முதல் வெற்றி பெற்று மீண்டதுவரை கடந்து சென்ற காலம் 32 மாதங்கள்[1] ஆகும்.

போர்ச் சிறப்பு

இவன் கடற்போரிலும் மலைப் போரிலும் ஈடுபட்டான். அப்பகுதிகளில் பல கோட்டைகளைக் கைப்பற்றினான்; பாசறைகளில் பல நாள்கள் தூங்காதிருந்தான். அப்போது இவனுக்குப் பால் உணர்வுகள் தோன்றுவதே இல்லை[2].

போரில் தான் கொன்று குவித்த வீரர் பிணங்களிடையே வெற்றிக் களிப்போடு தோள்கொட்டித் துணங்கைக் கூத்து ஆடினான்[3].

இவனது போர் வெற்றிகள் பலவற்றைச் சிறப்பித்து விறலியர் இவனது தொன்னகரான வஞ்சியில் இரவில் தெரு விளக்கொளியில் ஆடிப்பாடினர்[4].


  1. ஷை 27 : 149
  2. பதிற். 50 : 23 - 26
  3. பதிற். 45 : 11 - 12
  4. ஷை 47 : 7 - 8