பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


இவனது போர்வீரர்கள் - இவன் கூறும் வஞ்சின மொழிகள் இவனுக்குக் கைகூடுமாறு செய்த 'ஒன்றுமொழி மறவர்'[1] - வீரக்கழலே அன்றிக் கொடைக்கழலும் அணிந்திருந்தனர்: அம்பு தைத்துப் புண் ஆறிய அழகிய மார்பினை உடையவர்கள். இவர்கள் தும்பைப்பூச் சூடியதில்லை. அதாவது, வலியச் சென்று போர் தொடுத்தது இல்லை; பனம்பூமாலையை அணிந்திருந்தனர்[2].

கொடைத்தன்மை

போர் வெற்றியால் பகைவர்கள் நாட்டிலிருந்து இவனுக்குக் கிடைத்த பொருள்கள்,[3] கடல் வாணிகத்தால் இவனுக்குக் கிடைத்த பொருள்கள்[4] ஆகியவற்றை இவன் கொடையாக வழங்கினான்.

விறலியருக்கு ஆரம், பிடி முதலானவற்றை வழங்கினான்;[5] பாணர்க்குப் பொன்னாலான தாமரையை வழங்கினான்;[6] வீரர்களுக்குக்கள்ளும் மாவும் வழங்கினான்;[7] கொண்டி மன்னர்களுக்குப் போர்க் களிறுகளை வழங்கினான்.[8] அகவலர்களுக்குக் (குறி கூறுபவர்களுக்குக்) குதிரைகளும்,[9] பரிசில் நாடி வந்தவர்களுக்குக் களிறுகளும் இவன் வழங்கினான்[10].

பதிற்றுப்பத்தில் தன்னைப் பாடிச் சிறப்பித்த பரணர் என்னும் புலவர்க்கு உம்பற்காடு என்னும் பகுதியில் அரசுக்குக் கிடைத்த வருவாய் அனைத்தையும் கொடுத்தான். அதனுடன் இவனது அருமை மகன் குட்டுவன் சேரல் என்னும் பெயர் கொண்டவனைப் புலவர்க்குப் பணிவிடை செய்வதற்கென்று அனுப்பிவைத்தான்[11]. வடநாட்டு வெற்றிக்குப்பின் கங்கையாற்றின் தென்கரையில் பாடி வீடமைத்துத் தங்கியிருந்தபோது தமிழ்நாட்டிலிருந்து வந்த மாடலன் என்னும் மறையவனுக்குத் தன் எடைக்கு எடை பொன் கொடுத்தான் என்ற செய்தியைச் சிலப்பதிகாரத்தால் அறியலாம்.


  1. ஷை 41 : 18
  2. ஷை 42 : 1
  3. ஷை 44 : 5
  4. ஷை 48 : 4-5; புறம். 343 : 5-6
  5. ஷை 43 20-22, 48: 2, 49 : 2-4
  6. ஷை 48 : 1
  7. ஷை 42 : 12 - 15
  8. ஷை 43 : 25
  9. ஷை 43 : 28
  10. ஷை 43 : 21 - 25
  11. பதிற். பதி. 5 : 3