பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

65


பண்பு நலம்

இவன் பெருஞ்சினம் கொண்டவன்[1]. போர் முழக்கத்தைக் கேட்பதில் பெரும் விருப்பினன்[2].

சினத்தீயைப்போலவே இவன் தண்ணிய சாயலையும் உடையவன். இவனது அருள் காவிரி நீர் போலவும், குமரி முனை நீர் போலவும் பயனும், புனிதத் தன்மையும்[3] உடையதாயிருந்தது.

தோற்றப் பொலிவு

சந்தனம் பூசி அதன்மேல் வண்ணக் குழம்புகளால் வகைபெற எழுதி வண்டுகள் மொய்க்குமாறு பொலிவுடன் இவனது மார்பு விளங்கியது[4]. பொன்னாலாகிய மாலையையும் அணிந்திருந்தான்[5]. கணையமரம் போன்ற வலிமை மிக்க விலா எலும்புக் கட்டுடன் அகன்றிருந்தது அவன் மார்பாகும்[6]. மன்னர்களின் ஏழு முடிகளைக் கோத்து அணிந்திருந்தான் எனக் கூறுவோரும் உளர்[7]. இவன் பார்வைக்கு அடக்கம் உடையவனாகக் காணப்பட்டான். எனினும், யாருக்கும் வணங்காத ஆண்மை உடையவனாக விளங்கினான்[8]. யானைமீதும் தேர்மீதும் இவன் ஏறிச் சென்றான்[9].

சிறப்புச் செயல்கள்

இவனது செயல்களில் சிறப்பு மிக்கனவாக இரண்டைக் குறிப்பிடலாம். அஃதாவது கற்பரசி கண்ணகிக்குச் சிலையமைத்துத் தெய்வமாக்கி வழிபட்டதும், காஞ்சியம் பெருந்துறை என்னுமிடத்தில் தன் ஆயத்தார் புடைசூழ நீர்விழாக் கொண்டாடியதும்[10] ஆகும்.

மனைவி

இவனது மனைவி வேண்மாள் ஆவாள். இவளைச் சோழர் குடிப்பெண் என்பர். இவள் சிறந்த அழகியாவாள்[11]. இவன் பிற மகளிரோடு மகிழ்ந்திருந்ததாகத் தெரிகிறது[12].


  1. ஷை 49 : 17
  2. ஷை 43 : 9 - 10
  3. ஷை 50 : 6 -7
  4. ஷை 48 : 11-12, 50 : 16-18
  5. ஷை 43 : 11
  6. 'எழுமுடி மார்பின் எய்திய சேரல்' பதிற். 45 : 6
  7. பதிற். 45 : 6 உரை
  8. ஷை 48 : 9
  9. ஷை 41 : 7, 15, 42 : 18-20
  10. ஷை 48 : 18, சிலப்பதிகாரம்
  11. பதிற். 42 : 7
  12. ஷை 50 : 18