பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

இவன் தந்தை நெடுஞ்சேரலாதன்; தாய் வேளாவிக் கோமான் பதுமன் மகள்; அண்ணன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல், இவன் செங்குட்டுவனுக்கும் இளையவன் எனலாம்[1].

நாடு

பயன்படுத்த முடியாமல் அழியும் செல்வவளம் மிக்க நகரம் பந்தர்[2]. இது கடற்கரையில் இருந்தது[3]. இக்கடற்கரைப் பகுதி 'கானலம் பெருந்துறை' என்னும் பெயரைப் பெற்றிருந்தது. இப்பெருந்துறைப் பகுதியையும் அதனை அடுத்திருந்த வயல் வளம் மிக்க நன்னாட்டையும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தன் தொடக்க காலத்தில் ஆண்டு வந்தான். இக்காலத்தில் பந்தர் இவனது தலைநகரமாகக்கூட அமைந்திருக்கக்கூடும். இது இவனது தந்தை நெடுஞ்சேரலாதன் குடநாட்டிலிருந்து ஆண்டு கொண்டிருந்த காலம்.

தென்னை வளம்மிக்க துறைமுகம் நறவு. இது குட்டநாட்டின் வடபால் கொண்கான நாட்டில் இருந்தது. அப்பகுதியில் வாழ்ந்த இனத்தவரோடு இவன் மகிழ்ந்து வாழ்ந்துவந்தான்[4]. கொண்கான நாடு முல்லைவளம் மிக்க நாடு. அந்நாட்டு மக்கள் புன்புலத்தை உழுது விளையும் கதிர்மணிகளைப் பெற்று வாழ்ந்து வந்தனர். அந்த நாட்டு மக்கள் இவனது தலைமையை விரும்பி ஏற்றனர்[5].

நெடுஞ்சேரலாதனுக்குப் பின் செங்குட்டுவன் தலைமையின் கீழ்ச் சேரநாட்டு ஆட்சி அமைந்தது. அப்போது இவன் தான் ஆண்டு கொண்டிருந்த நாட்டுக்குத் தெற்கிலிருந்த குட நாட்டு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றான்[6].

இவனது ஆட்சிக்காலம் முழுவதும் நாடு காவல் பணியாய் அமைந்திருந்தது எனலாம்.


  1. பதிற்றுப்பத்தில் இவனது பத்து, ஆறாம் பத்தாக வைத்திருப்பது ஒன்றுதான் இதற்கு அடிப்படை
  2. பதிற். 55 : 4
  3. ஷை 53 : 4
  4. ஷை 60 : 10 - 12
  5. ஷை 58 : 19, 'நாடுகிழவோன்' ஒப்புநோக்குக. கொண்கானங்கிழான்.
  6. பதிற். 55 : 9 ‘குடவர்கோ’