பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

67


இவன் தன்னை அண்டி வாழ்ந்த மழநாட்டுக் குடமக்களுக்குக் கவசம்போல் அமைந்து அவர்களைக் காத்து வந்தான்[1]. தன் ஆட்சியை விரும்பாத மழவர்களை இவன் வென்று அவர்களின் தொகை குறையுமாறு செய்தான்.

மழவர்களுக்குக் கவசம்போல் விளங்கியது போலவே இவன் குதிரைமலைப் பகுதியிலிருந்த வில்லோர் குடிமக்களுக்கும் பாதுகாவலனாய் விளங்கினான்[2].

போர்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தன் முன்னோர் வென்ற நாடுகளை யெல்லாம் தானும் வென்றான்[3]. வேந்தர்தம் தார்ப் படை அழிந்து அலறுகையில் மலைநாட்டைக் கைப்பற்றினான்[4]. வேந்தர்கள் போர்க்களத்தில் மெய்மறந்தனர்[5]. மனைவியைப் பிரிந்திருந்தவன் வேந்தர்களின் எயிலைப் பிரிந்திருக்வில்லை[6] என்பது இவன் உழிஞைப் போரில் ஈடுபட்டிருந்த நிலைமையைக் காட்டும். இவனுக்கு நண்பர் அல்லாத ஏனைய மழவர் இவனது பகைவர்களுடன் சேர்ந்து கொண்டு இவனைத் தாக்கியபோது இவன் அவர்களைக் கொன்று அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தான்[7]. போர்களில் இவன் பல மன்னர்களைத் தோற்றோடும்படி செய்தான்[8]. பகைவர்கள் இவனுக்குத் திறைதந்த போது அதனை ஏற்றுக்கொண்டு அவர்களை அழிக்காமல் விட்டு விட்டு மீண்டான்[9].

தண்டாரணியப் போர்

இவையேயன்றி ஆறாம் பத்துப் பாடப்பட்ட காலத்திற்குப் பின் இவன் கரந்தைப் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். தண்டாரணியத்தில் வாழ்ந்த மக்கள் இவனது குடநாட்டில் புகுந்து வருடை ஆடுகளைக் கவர்ந்து சென்றனர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியத்துக்கே படையெடுத்துச் சென்று அவர்கள் கவர்ந்துசென்ற ஆடுகளை மீட்டுக்கொண்டு வந்தான். அவற்றைத் தொண்டி நகருக்குக் கொண்டு வந்து ஆட்டுக் குரியாருக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தான்[10].


  1. ஷை 55 : 8 'மழவர் மெய்ம்மறை'
  2. ஷை 59 : 9 'வில்லோர் மெய்ம்மறை'
  3. ஷை 53 : 12 – 13
  4. ஷை 55 : 17 - 18
  5. ஷை 56 : 7
  6. ஷை 52 : 31
  7. ஷை பதி. 6 : 7 - 8
  8. ஷை 6 : 8
  9. பதிற். 53 : 10 - 13
  10. பதிற். பதி. 6 : 3 - 4