பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


படைச் செருக்கு

இவனது வெற்றிகளுக்கு உறுதுணையாய் அமைந்தவை போர்த் திறமும் இவனது படையின் ஆற்றலுமாகும்.

நாகப்பாம்பை இடிகொல்வதுபோலப் பகைவர்களைக் கொல்லும் ஆற்றல் மிக்கவன் இவன்[1]. இவனது படை வீரர்கள் வாண்முகம் பொறித்த தழும்பினைப் பெற்றவர்களாய்ப் பயிற்சித் திறம் மிக்கு விளங்கினர்[2]. தும்பை சூடித் தேரில் ஏறிவந்து இவனது நாட்டைத் தாக்கிய பகைவரின் தார்ப்படையை இவர்கள் போந்தை சூடி எதிர்த்து வென்று கொன்றனர்[3]. இவனது படைகள் பகைவரின் யானைகளைக் கண்டு நிலைகொள்ளாது பாய்ந்தன[4].

கொடைத் தன்மை

எல்லா வசதிகளையும் பெற்றவர்கள் செல்வர்கள். இவன் அத்தகைய வசதிகளையெல்லாம் பெற்றிருந்ததோடு அவற்றைப் பிறர்க்கு அளித்துச் செல்வர் செல்வனவாக விளங்கினான். சேர்ந்தோரை யெல்லாம் பாதுகாக்கும் கோட்டை அரணாக இவன் விளங்கினான்[5]. இரவலர்கள் யாரும் இவனை நாடி வாராத காலத்தில் இவன் தானே சென்று தேடிப் பிடித்துத் தேரில் ஏற்றிக்கொண்டு வந்து அவர்களுக்குப் பரிசில்கள் நல்கினான்[6]. அவர்கள் ஆசைப்பட்ட மொழிகளைப் பேசி, பின் பேசியபடியே நடந்து தன் சொல்லை உண்மையாக்கினான்[7]. இரவலர்களுக்குப் பரிசில் நல்கியதோடு அமையாது அவர்கள் வாழ்ந்த ஊர்களையே வளம் பெருகச் செய்தான்[8].

இவன் இரவலர்கள் சிறு துன்பம் அடைவதைக்கண்டு பெரிதும் அஞ்சி அதனைப் போக்கினான்[9]. இத்தகைய பண்புகள் நிறைந்த இவனைப் பலரும் 'வள்ளல்' என்று புகழ்ந்துரைத்தனர்[10].


  1. பதிற். 51 : 26 - 28
  2. ஷை 57 : 1 - 3
  3. ஷை 51 : 31
  4. ஷை 54 : 16 - 17
  5. ........
  6. ஷை 55 : 10 – 11
  7. ஷை 55 : 12 'நசைசால் வாய்மொழி'
  8. 'இரவல் மாக்கள சிறுகுடி பெருக உலகம் தாங்கிய மேம்படு கற்பின்' (பதிற்...)
  9. ...
  10. பதிற். 54 : 1