பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


குறித்த விவாதம் தமிழ்ப் பொழில் இதழில் நடைபெற்றிருப்பதை அறிய முடிகிறது. 'தமிழ்ப்பொழில்' இதழிலிருந்து இக்கட்டுரை எடுக்கப்பட்டு இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

சோழ நாட்டின் எல்லைகள், சோழர் குடியின் பழமை, கரிகாற் சோழன் குறித்த தகவல்கள், சென்னி மரபினர், கிள்ளி மரபினர் ஆகிய பிற செய்திகளைச் சோழர்கள் குறித்த கட்டுரையில் பதிவு செய்துள்ளார். தொன்ம மரபில் அறியப்படும் சோழ மன்னர்கள் குறித்த விரிவான தகவல்களை அறிய முடிகிறது.

பாண்டிய நாட்டு எல்லை, பாண்டிய நாட்டு துறைமுகங்கள் மற்றும் நகரங்கள், பாண்டியர்களின் குடி வழி மரபு ஆகிய தகவல்களைப் பதிவு செய்துள்ளார். பழங்கதைகள் மூலம் அறியப்படும் பாண்டிய மன்னர்கள் குறித்த விவரங்களையும் தொகுத்தளித்துள்ளார். ஆரியப்படை கடந்து அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் மற்றும் பாண்டியர் நிறுவிய தமிழ்ச்சங்கம் ஆகிய கட்டுரைகள் இதழ்களிலிருந்து எடுத்து இணைக்கப்பட்டுள்ளன.

சங்ககால மூவேந்தர்கள் தொடர்பான அரிய ஆவணம் இந்நூல். சங்க இலக்கியப் பிரதிகள் வழி கட்டமைக்கப்பட்டுள்ள இவ்வரலாறு தமிழ்ச் சமூகம் குறித்து அறிய உதவுகிறது.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

ஏப்ரல் 2010
சென்னை - 96

வீ. அரசு
தமிழ்ப்பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்