பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


தழுவிக்கொண்டு ஆடும் துணங்கை ஆட்டத்தில் இவனும் தலைக்கை தந்து (தலைமையிடம் கொண்டு) நெளிந்து ஆடினான்[1]. வெற்றிக்குப் பின் போர்க்களத்தில் ஆடும் துணங்கை ஆட்டத்திலும் இவன் பங்கு கொண்டான்[2]. இவ்வாறு ஆட்டத்தில் ஈடுபட்டுத் தன் மனைவியையும் மறந்து நீண்ட நாள் வெளியில் தங்கிவிட்டதும் உண்டு[3]. அரசாட்சியை மறந்து தங்கிவிட்டதும் உண்டு[4].

இவன் தனது நாட்டைக் குழந்தையைக் காக்கும் தாய்போலக் காத்து வந்தான்[5]. நன்னடத்தைக்குப் பெருமதிப்பளித்துச் சான்றோர்களைப் பேணி வந்தான்[6].

உருவத் தோற்றம்

ஒளிவீசும் அணிகலன்களை இவன் அணிந்திருந்தான். போர்ச் சின்னமாக அணியும் உழிஞைப் பூவையும் பொன்னால் செய்து அணிந்துகொள்ளும் அணிவேட்கையன்[7]. வேங்கையை வென்ற களிற்றின்மீது ஏறிக்கொண்டு இவன் சென்றது உண்டு[8].

சிறப்புப் பெயர்கள்

வானவரம்பன்[9] ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்[10] என்பன இவனது சிறப்புப் பெயர்கள். இவன் ஆடற்கலையில் சிறந்து விளங்கினான் என்று குறிப்பிட்டோம். இதனாலோ, வருடை ஆடுகளை மீட்டுக்கொண்டு வந்தமையாலோ இவன் 'ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்' என்று சிறப்பிக்கப்பட்டான்.

மனைவி

இவன் மனைவி சிறந்த அறிவுநலம் வாய்க்கப்பெற்றவள்[11]. இவன் ஆட்டத்தில் ஈடுபட்டுப் பலநாள் வெளியில் தங்கியிருந்த போது அவனைப் பிரிந்து தனிமையில் இவள் வாழ்ந்துவர நேர்ந்தது. அவன் பல நாள்கள் கழிந்து மீண்டும் இவளிடம் வந்த போது இவள் ஊடினாள்[12].


  1. பதிற். 52 : 14, 56 : 3
  2. ஷை 57 : 4
  3. ஷை 51 : 11 - 15
  4. ஷை 59 : 19, 'நாடு புறந்தருதல், நினக்குமார் கடனே' என்று அறிவுறுத்தப் படுவதால் இது விளங்கும்
  5. பதிற். பதி. 6 : 2 - 10
  6. பதிற். 55 : 1
  7. ஷை 56 : 5
  8. ......
  9. ஷை 58 : 12; பதிற். பதி. 6 : 6
  10. பதிற். பதி. 6 : 11
  11. பதிற். 55 : 1, 'ஆன்றோள் கணவ'
  12. ......