பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

71


பிற சேர வேந்தரின் மனைவியைப் போல ஆறிய கற்புடையவள் அல்லள்; கணவனை ஊடித் திருத்தும் சீறிய கற்பினள். இவளேயன்றி வேறு மனைவியரும் இவனுக்கு இருந்தனர்.

உதியன் கால்வழி அரசர்கள்
(திரண்ட நோக்கு)

உதியன் கால்வழி அரசர்கள் என்று தெளிவாகத் தெரியவருபவர் அறுவர் என்று கண்டு அவர்களது வரலாற்றைத் தனித் தனியே விரிவாக அறிந்தோம். இனி அவர்கள் அறுவரது உறவு முறைகள், அரசாண்ட இடங்கள், போர்கள், சிறப்புச் செயல்கள் முதலானவற்றை ஒருங்கிணைத்துத் திரட்டி ஆய்வுக் கண்ணோட்டத்தில் நோக்குவோம்.

அடியில் காணும் பட்டியல் அவர்களது உறவு முறையினை விளக்கும்.

உதியன் கால்வழி அரசர்களின் உறவு முறை
(பதிற்றுப்பத்துப் பதிகத்தில் உள்ளபடி)

உதியஞ் சேரற்கு வெளியன் வேள் மான் (மகள்) நல்லினி ஈன்ற மகன் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன்
இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன்
ஆராத்திருவின் சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
குடவர்கோமான் நெடுஞ் சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன்
குடக்கோ நெடுஞ் சேரலாதற்கு வேளாவிக் கோமான் தேவி ஈன்ற மகன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்

முன் கண்ட அட்டவணைச் செய்தியைக்கொண்டு கீழ்க் காணும் உருவமைதியால் இந்த அரசர்களது உறவினை விளக்கலாம்.