பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

77


நாடு

இவன் கருவூரைத் தலைநகராகக்கொண்டு நாடாண்டு வந்தான். கொங்கு நாட்டிலுள்ள கருவூரே இவனது கருவூர் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

அந்துவனும் மோசியாரும்

உறையூர் ஏணிச்சேரி என்னுமிடத்தில் பிறந்து வளர்ந்த மோசியார் என்னும் பெயர்கொண்ட முடவனார். அந்துவனால் மதிக்கப் பட்ட புலவர். ஒரு நாள் அந்தப் புலவருடன் கருவூர் வேண்மாடத்தில் அரசன் அமர்ந்திருந்தபோது சோழ அரசன் முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி யானைமீது அமர்ந்த வண்ணம் கருவூர்த் தெருவில் செல்வதைக் காண நேர்ந்தது. அந்தக் காட்சி சோழ அரசன் சேர நாட்டின்மீது படையெடுத்து வருவதுபோன்று பொதுவகையால் தோற்றமளித்தது; ஆனால், உண்மை அதுவன்று. சோழன் அமர்ந்திருந்த பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது. அது சோழனது கட்டுப்பாட்டிற்குள் நில்லாது விருப்பம்போல் ஓடியது. இந்த நிலையில் தான் அந்த யானை கருவூர்த் தெருவில் ஓடிவந்தது. யானைமீது அரசன் இருந்ததால் அவனைக் காக்கும் பொருட்டுக் காவலர்கள் தொடர்ந்து ஓடிவந்தனர். யானையின் மதங்கொண்ட நிலையையும் சோழனின் அளித்தக்க நிலையையும் வேண்மாடத்தில் சேர அரசனோடு இருந்த புலவர் உணர்ந்து சேர அரசனிடம் எடுத்துக் கூறினார். சேரன் முதலில் சோழன் படையெடுத்து வருவதாக எண்ணினான் போலும். புலவரின் இந்த உரையால் சேரன் தெளிவு பெற்றிருக்கலாம். சோழனை மதங்கொண்ட யானையிடமிருந்து மீட்க உதவியும் இருக்கலாம். சோழன் பிழைத்திருக்கலாம். இருவரும் நண்பர்களாகியிருக்கலாம். முடிவு என்னவாயிருந்தது என்பதற்குச் சான்றில்லை.

சோழன் கருவூர் வரவேண்டிய அளவுக்கு என்ன நிலை நேர்ந்தது என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். எமன் போன்ற யானை மீதிருந்த சோழன் கவசம் சிதைந்த அம்புபட்ட அகன்ற மார்பை உடையவனாக விளங்கினான் என்று கூறப்படுகிறது[1]. இதனால் இவன் பகைவரை எதிர்த்துப் போராடிய நிலையில் யானைமீது வந்திருந்தான் என்பது பெறப்படுகிறது. இவனது மார்பில் அம்புகள் எய்து காயப்-


  1. இவனே புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின் மறலி யன்ன களிற்றுமிசை யோனே' (புறம். 13 : 1-4)