பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

79


பொறை, மேலே கூறப்பட்ட மோசியாரின் மகன் என்று பெயர் அமைப்பால் கொள்ளக் கிடக்கும் புலவர் மோசிகீரனார்க்குக் கவரி வீசினான். இந்த நிகழ்ச்சிகள் புலவர்களிடம் இவர்கள் வைத்திருந்த நட்பையும் நன்மதிப்பையும் புலப்படுத்துகின்றன.

மகன்

இவனது மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன் ஆவான்.

செல்வக்கடுங்கோ வாழியாதன்

ஒருதந்தை என்பவனின் மகள் பொறையன் பெருந்தேவி. இவளுக்கும் அத்துவஞ்சேரலிரும்பொறைக்கும் பிறந்த மகன் செல்வக்கடுங்கோ வாழியாதன்.

நாடு

இவன் தொடக்க நிலையில் பூழி நாட்டை ஆண்டுவந்தான்[1]. பூழி நாடு நேரிமலையைத் தன்னகத்தே கொண்டது[2]. செருப்பு மலையும் அயிரையும் கூட இப்பூழிநாட்டிலேதான் இருந்தன[3]. பூழி நாட்டிலிருந்த செருப்புமலைப் பகுதியைப் பல்யானைக் குட்டுவன் ஆண்டு கொண்டிருந்த போதுதான், வாழியாதன் அதே நாட்டிலிருந்த நேரிமலைப் பகுதியை ஆண்டுகொண்டிருந்தான். இந்த இருவர் நாட்டுப் பகுதிகளிலும் மணிக் கற்கள் கிடைத்தன[4]. நேரிமலைப் பகுதியில் பலாப்பழம் மிகுதி[5].

இவனைப் பாடிய புலவர் கபிலர், இவன் நறவு என்னும் ஊரில் இருந்த போது பாடினார். இனிய சுனைகளையும் செல்வ வளச் செழுமையையும் கொண்ட பக்கமலைகள் பல சூழ்ந்த நாட்டுப் பகுதியில் அந்த 'நறவு' என்னும் நகரம் இருந்தது[6] என்று கூறப்படுவதால், இவனது தொடக்ககால ஆட்சி பூழி நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும் இவனது பல வெற்றிகளுக்குப்பின் மேலைக் கடற்கரையில் இருந்த நறவுப்பட்டினமும் இவனது ஆட்சிக்கு உட்பட்டது எனலாம்.


  1. புறம். 387 : 28, 'பூழியர் பெருமகன்'
  2. பதிற்.67 : 22, நன்னனைக் கொன்றுவிட்டு நார்முடிச்சேரல் இங்குத் தங்கி இருந்த இடத்தையும் இவ்விடத்து நினைவுகூரலாம். பதிற். 40 : 14 – 16
  3. பதிற். 21 : 23, 29
  4. ஷை 21 : 22, 58 : 17 - 18
  5. ஷை 61 : 1
  6. ஷை 85 : 6 - 8