பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


'வில்லோர் மெய்ம்மறை' என்று இவன் குறிப்பிடப்படுகிறான். 'வில்லோர்' குடியினர் குதிரைமலைப் பகுதியில் வாழ்ந்துவந்தனர்[1]. அவர்களுக்கு இவன் மார்புக் கவசம்போல் பாதுகாவலாய் விளங்கினான்[2].

தன் தந்தைக்குப்பின் இந்த வாழியாதன், அவன் ஆண்டு கொண்டிருந்த கொங்குநாட்டுக் கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவரலானான்[3].

வெற்றிகள்

இவன் எந்த நாட்டோடு, யாரோடு போரிட்டான் என்னும் செய்திகள் பாடல்களில் குறிப்பிடப்படவில்லை. எனினும், பகை வேந்தரின் செம்மாப்பைத் தொலைத்தான்;[4] அவர்களின் காவற் காட்டில் தன் முரசு முழங்க யானைப்படையை நடத்திச் சென்றான்;[5] உழிஞைப் பூச்சூடி மதிலை முற்றுகையிட்டு ஒரே முற்றுகையில் இருவரைத் தோற்றோடும்படி செய்தான்;[6] படையுடன் வளைத்து எயிலை முற்றுகை இட்டான்;[7] இவனது வீரர்கள் பகைவேந்தர் ஊர்ந்துவந்த பட்டத்து யானையின் தந்தத்தைக் கொண்டுவந்து தாம் உண்ட கள்ளுக்கு விலையாகக் கொடுத்தனர்[8] என்னும் செய்திகள் இவன் பகை வேந்தரின் மதிலை முற்றுகையிட்டு வென்றதைக் குறிப்பிடுகின்றன.

பல்யானைக் குட்டுவன் அகப்பாக் கோட்டையை அழித்தான். பாண்டியனையும் அவனைச் சார்ந்தோரையும் வென்றான். இந்தப் போரில் பல்யானைக் குட்டுவனுக்குத் துணையாக வாழியாதன் போரிட்டிருக்க வேண்டும். இந்தப் போர் நிகழ்ச்சிகளே மேற்கண்ட


  1. 'வில்லோர்குடி' வரலாறு காண்க.
  2. குதிரைமலைப் பகுதியை அஞ்சியும், எழினியும் ஆண்டபோது அவனது ஆட்சியை விரும்பாத வில்லோர் சிலர் இவனுக்கு எதிராய் இவனது துணையையும் நன்னனது துணையையும் பெற்றனர். அவ்வாறே புன்னாட்டுக் கொங்கரும் பெற்றனர். இவற்றை அவ்வப்பகுதியில் காணலாம்.
  3. புறம். 387 : 34 'பொருநை' ஆள்பொருநைஅமராவதி என்றும் வழங்கப்படுகிறது.
  4. பதிற். 70 : 10
  5. புறம். 387 : 19 - 22
  6. பதிற். 63 : 8 - 11
  7. ஷை 64 : 2
  8. ஷை 68 : 9 - 11